ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பெங்களூர் டூ சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெருகரும்பூர் ஜங்ஷனில் உள்ள சர்வீஸ் ரோட்டில் நேற்று இரவு 11 மணிக்கு மர்மமான முறையில் கன்டெய்னர் தீப்பற்றி எரிந்தது.
அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கன்டெய்னர் லாரியின் முன் பகுதியில் உள்ள இன்ஜின் மாயமான நிலையில் கன்டெய்னர் மட்டும் தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் கன்டெய்னரில் உள்ள ஒரு டயர் டமார் என பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் அருகே உள்ள குடியிருப்புவாசிகள் அச்சம் அடைந்தனர். இதுகுறித்து அப்பகுதி குடியிருப்புவாசிகள் ராணிப்பேட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராணிப்பேட்டை தீயணைப்பு வீரர்கள் கன்டெய்னரை சுற்றி தண்ணீர் பாய்ச்சி தீயை அணைத்தனர். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர்.
தீயில் கன்டெய்னரில் இருந்த பொருட்கள் முற்றிலும் எரிந்து சாம்பலானது. தீயின் காரணம் குறித்து காவேரிப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.