ராணிப்பேட்டை: ஊரக வேலை திட்ட பெண்களை தரக்குறைவாக பேசிய மேற்பார்வையாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியல்
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த புதுப்பாடி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதி வேலை திட்டத்தில் வேலை புரியும் பெண்களை ஒன்றிய மேற்பார்வையாளர் கௌரி தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து பணி புரியும் பெண்கள் கலவை ஆற்காடு சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். அவர்கள், "ஊரக வேலை திட்டத்தில் நாங்கள் கடின உழைப்பை செய்கிறோம். ஆனால், எங்களை தரக்குறைவாக பேசுகிறார்கள். இதனை கண்டித்து நாங்கள் போராட்டத்தில் ஈடுபடுகிறோம். மேற்பார்வையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை எழுப்பினர்.
இதனை அறிந்த ஆற்காடு கிராமிய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பெண்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, "மேற்பார்வையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்று உறுதியளித்தனர். இதனையடுத்து, பெண்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.