ராணிப்பேட்டையில் தேசிய வாக்காளர் தின விழா
ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தேசிய வாக்காளர் தின விழா கொண்டாடப்பட்டது. கலெக்டர் வளர்மதி தலைமை வகித்தார்.
இந்த விழாவில், வாக்காளர் விழிப்புணர்வு கட்டுரை, சுவர் விளம்பரம், இதழ் விளம்பரம், பாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்பட்டது. கோலப் போட்டியில் விழிப்புணர்வு ஏற்படுத்திய மகளிர் சுயஉதவிக்குழுவினர், சிறப்பாக செயல்பட்ட ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
விழாவில் பேசிய கலெக்டர், 18 வயது நிரம்பிய ஒவ்வொருவரும் கட்டாயம் வாக்குப்பதிவில் பங்கேற்க வேண்டும். வாக்குரிமை உள்ளவர்கள் எந்த ஒரு சலுகையும் எதிர்பார்க்காமல் நேர்மையான முறையில் வாக்கை செலுத்த வேண்டும். வாக்கை விற்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டார்.
மேலும், வாக்காளர் விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்த விழாவில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஜயராகவன், ராணிப்பேட்டை ஆர்டிஓ மணோன்மணி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முரளி, தேர்தல் தாசில்தார் ஜெயகுமார், துணைதாசில்தார்கள், தேர்தல் பிரிவு அலுவலர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.