ராணிப்பேட்டை: தாயின் மரணம் விரக்தியில் தினக்கூலி தொழிலாளி தற்கொலை
ராணிப்பேட்டை மாவட்டம், காரை பகுதியை சேர்ந்த வேங்கை மாறன் (40) என்பவர் நகராட்சியில் தினக்கூலியாக வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி வைதீஸ்வரி என்ற மனைவி, இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில், வேங்கை மாறனின் தாயார் கடந்த ஆண்டு இறந்தார். அவரது முதலாண்டு நினைவு நாளையொட்டி, நேற்று முன்தினம் குடும்பத்தினர் பாலாற்றங்கரையில் உள்ள சுடுகாட்டுக்கு சென்று சடங்குகள் செய்தனர். சடங்குகள் முடிந்து அனைவரும் வீடு திரும்பினர்.
ஆனால் வேங்கை மாறன் மட்டும் பின்னர் வருவதாகக்கூறி அங்கேயே அமர்ந்துவிட்டாராம். வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால், குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடியுள்ளனர்.
அதில், அவர் பாலாற்றங்கரையோரம் மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது.
தாயின் மறைவால் விரக்தியில் இருந்த வேங்கை மாறன் தற்கொலை முடிவுக்கு வந்ததாக தெரிகிறது. இதுகுறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.