ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் தொடர் கன மழை பெய்து வருவதால் பாலாறு மற்றும் அதன் துணை ஆறுகளான மலட்டாறு, அகரம் ஆறு, கவுன்டன்யா ஆறு, பொன்னை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில், வாலாஜா பாலாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் காலை 6 மணி நிலவரப்படி, அணைக்கு வினாடிக்கு 1,000 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. இன்று காலை 6 மணி நிலவரப்படி, அணைக்கு வினாடிக்கு 1,100 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.
இதனால் வாலாஜா பாலாறு அணைக்கட்டிலிருந்து மகேந்திரவாடி பகுதிக்கு 45 கன அடி, காவேரி பார்க்கும் பகுதிக்கு 89 கன அடி, சக்கரமல்லூர் பகுதிக்கு 67 கன அடி, மாமண்டூர் பகுதிக்கு 148 கன அடி என மொத்தம் 349 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
பாலாற்றின் கரையோரம் உள்ள 30 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இன்று ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெய்யும் மழை
ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் இன்று ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.