ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் ஊராட்சிக்கு உட்பட்டது மேல்வெங்கடாபுரம் ஊராட்சி. சோளிங்கரில் இருந்து வாலாஜாபேட்டை செல்லும் மாநில நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளது.
இந்த ஊராட்சியில், மாவட்டத்திலேயே முதல் முறையாக ஊராட்சி நுாலகம் கட்டப்பட்டுள்ளது. இந்த நுாலகம், முன்மாதிரி திட்டமாக கட்டப்பட்டுள்ளது. வழக்கமான நுாலக கட்டடத்தின் முகப்பு பகுதி மேலும் சற்று விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
முகப்பு பகுதியில், மங்களூர் ஓடு வேயப்பட்ட கூரை போல், இரம்ப தகடுகளை கொண்டு கூரை அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு வேலியாக, இரும்பு சட்டங்களை வைத்து உருவாக்கியுஉள்ளனர். இது மூங்கில் குச்சி வேலையை நினைவூட்டுவதாக உள்ளது.
இதன் உள்ளே, பளிங்கு கற்களால் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. மின்விசிறி வசதியும் உள்ளது. நுாலகத்தில் இருந்து புத்தகம் மற்றும் நாளேடுகளை எடுத்து வந்து இந்த கூடத்தில் அமர்ந்து வாசகர்கள் வாசிக்கின்றனர். நுாலகத்தை சுற்றிலும் ஓங்கி உயர்ந்த மரங்கள் வளர்ந்துள்ளது மேலும் சிறப்பு.
இந்த நுாலகத்தின் தோற்றம் பகுதிவாசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. இதனால், தினசரி நுாற்றுக்கணக்கானோர் இங்கு படிக்க வருகின்றனர் என நுாலகர் தினகரன் கூறுகிறார்.
இந்த நுாலகம், பகுதிவாசிகளின் கல்வி மற்றும் அறிவு வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.