ராணிப்பேட்டையில் பட்டாசு சிறுசேமிப்பு திட்டம் தொடர்பான முன்விரோதம்: இருவர் குத்துக்காயத்தில் மருத்துவமனையில் அனுமதி
ராணிப்பேட்டை மாவட்டம் ஜெயராம்நகர் வடக்கு தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 29). இவருடைய நண்பர் முருகனுக்கும், சீனிவாசன் பேட்டை பகுதியை சேர்ந்த வினோத்குமாருக்கும் இடையே பட்டாசு சிறுசேமிப்பு திட்டத்தில் பணம் செலுத்தியது தொடர்பாக மோதல் ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது.இந்த நிலையில், நேற்று இரவு சதீஷ்குமார், முருகன், அபினேஷ் மற்றும் சிலர் மது குடிக்க சென்றுள்ளனர். அங்கு வைத்து அவர்களுக்கும், வினோத்குமாருக்கும் இடையே முன்விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, வினோத்குமார் தரப்பினர் சதீஷ்குமார், அபினேசை கத்தியால் குத்தினர். இதில், சதீஷ்குமாரின் கழுத்திலும், அபினேஷின் வயிற்றிலும் குத்தப்பட்டது.
இதில் காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக வாலாஜா பேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தகவல் அறிந்த ராணிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், பட்டாசு சிறுசேமிப்பு திட்டம் தொடர்பான முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து, வினோத்குமார் (38), மணிகண்டன் (22), மற்றும் குகன் (25) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
இதுகுறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.