ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை அடுத்த சீனிவாசன்பேட்டை பகுதியில், இரண்டு வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், "மணிமாறன் (2) என்பவர் சீனிவாசன்பேட்டை பகுதியில் வசித்து வந்தார். நேற்று மாலை, வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த மணிமாறன், எதிர்பாராதவிதமாக அருகிலிருந்த தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிருக்கு போராடினார்.
வீட்டிற்குள் இருந்த தாய் மணிமேகலைக்கு சரியாக காது கேளாமை பிரச்னை இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், குழந்தையின் சத்தம் கேட்கவில்லை. நீண்ட நேரமாக குழந்தை காணாததால், தாய் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியுள்ளனர். அப்போது, வீட்டில் இருந்த தண்ணீர் தொட்டியில் குழந்தை இருப்பதைக் கண்ட தாய் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக குழந்தையை மீட்ட தாய் மற்றும் உறவினர்கள் அருகில் இருந்த வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால், குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர்.
இதுகுறித்து வாலாஜாபேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது" என்று தெரிவித்தனர்.