வேலூர் காகிதப்பட்டறை நைனியப்பன் தெருவை சேர்ந்தவர் பரிமேலழகர் (வயது 61). இவர் ஒரு புகைப்பட கலைஞர். இவரது மனைவி ஈஸ்வரி ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் தாசில்தாராக பணிபுரிகிறார்.
நேற்று காலை பரிமேலழகர் கலெக்டர் அலுவலகத்திற்கு பைக்கில் வந்தார். அப்போது கலெக்டர் அலுவலக வாயிலில் ஒரு வேன் வந்ததால், பைக்கை நிறுத்த கால்களை ஊன்றினர்.
அப்போது நுழைவுவாயிலில் தரையில் பொருத்தப்பட்டு இருந்த இரும்பு குழாய்களுக்கு இடையே பரிமேலழகனின் கால் சிக்கிக் கொண்டது. இதனால் அவர் வலியால் அலறி துடித்தார்.
இதனை பார்த்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், குழாய்களுக்கு இடையில் சிக்கிக்கொண்ட பரிமேலழகனை மீட்க முயற்சி செய்தனர். ஆனால் அவர்களால் முடியவில்லை.
இதையடுத்து, வேலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி இரும்பு குழாய்களை வெட்டி அகற்றினர். பின்னர் பரிமேலழகரை சுமார் 2 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு மீட்டனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதேபோன்ற சம்பவம் கடந்த வருடம் நடந்தது
கடந்த வருடம், ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரின் கால் குழாய்களுக்கு இடையே சிக்கிக் கொண்டது. அப்போதும் தீயணைப்புத் துறையினர் இரும்பு குழாய்களை வெட்டி அகற்றி போலீஸ் இன்ஸ்பெக்டரை மீட்டனர்.