ஆற்காடு மாவட்டம், புதுப்பாடி கிராமத்தை சேர்ந்தவர்கள் சுப்பிரமணி (46), உமாபதி (42) மற்றும் கன்னியம்மாள் (47). இவர்களில், கன்னியம்மாளுக்கு சொந்தமான 2 பசுமாடுகள், சுப்பிரமணி, உமாபதி ஆகியோருக்கு சொந்தமான தலா ஒரு பசு மாட்டை புதுப்பாடி ஏரிப்பகுதியில் மேய்ச்சலுக்காக கட்டி வைத்துள்ளனர்.
நேற்று மாலை 5.45 மணியளவில் ஆற்காடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது புதுப்பாடி ஏரியில் மேய்ந்துகொண்டு இருந்த 4 பசுக்களை மின்னல் தாக்கியது. இதில், 4 பசுக்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆற்காடு வருவாய்த்துறையினர் மற்றும் ஆற்காடு தாலுகா போலீசார் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
இந்த சம்பவம் குறித்து ஆற்காடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.