ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம், நெமிலி சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று காலை முதலே வெயில் வாட்டியது. இதனால் வழக்கத்தை விட மக்கள் நடமாட்டம் குறைவாக காணப்பட்டது.
இந்நிலையில், மாலை 5.45 மணிக்கு திடீரென இடி, மின்னல், சூறைக் காற்றுடன் கனமழை பெய்ய தொடங்கியது. இந்த மழை சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. கன மழையால் ரோடுகளில் மழைநீர் வெள்ளம் போல் ஓடியது. பின்னர் 7.30 மணிக்கு மீண்டும் தொடங்கிய மழை 8.30 மணி வரை பெய்தது. கனமழை காரணமாக அரக்கோணம் மற்றும் நெமிலியில் பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
பழனிப்பேட்டை இரட்டை கண் பாலத்தில் எப்போதும் போல் மழை நீர் 3 அடிக்கு மேல் தேங்கியது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கன மழை மற்றும் குளிர் காற்று வீசியதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.