ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த சேந்தமங்கலம் அருகே இன்று (செப்டம்பர் 15) காலை லோடு ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் வாழைப்பழத்தார்கள் சாலையில் சிதறின.
ஆந்திர மாநிலம், கடப்பா பகுதியில் இருந்து வாழைப்பழத்தார்களை ஏற்றிக்கொண்டு லோடு ஆட்டோ திண்டிவனம் சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிரே வந்த பால் வேன் மீது லோடு ஆட்டோ உரசியது. இதில் லோடு ஆட்டோ ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி தலைகீழாக கவிழ்ந்தது.
இந்த விபத்தில் லோடு ஆட்டோவில் இருந்த வாழைப்பழத்தார்கள் சாலையில் விழுந்து நசுங்கின. இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விபத்து குறித்து நெமிலி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் லோடு ஆட்டோவை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.