ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அடுத்த ஜாகீர்தண்டலம் பகுதியை சேர்ந்த 84 வயதான நடராஜ் கிணற்றில் விழுந்து உயிரிழந்தார்.
நடராஜ் நேற்று வழக்கம்போல் தன்னுடைய விவசாய நிலத்திற்கு துணி துவைக்க செல்வதாக கூறிவிட்டு சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வீட்டுக்கு வரவில்லை. இதையடுத்து அவரது மகன் கலைச்செல்வன் மற்றும் உறவினர்கள் அவரை அக்கம் பக்கம் தேடி பார்த்தனர். அப்போது கிணற்றின் அருகே நடராஜ் வேட்டி கிடந்தது.
இது குறித்து அரக்கோணம் தீயணைப்பு துறை மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கிணற்றில் இறங்கி தேடி பார்த்தனர். அப்போது கிணற்றில் நடராஜ் பிணமாக கிடந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவரது உடலை அவர்கள் மீட்டனர்.இது குறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து நடராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடராஜ் மரணம் குறித்து காவேரிப்பாக்கம் போலீசார் கூறுகையில், "நடராஜ் வயது முதிர்வு காரணமாக கிணற்றில் விழுந்து உயிரிழந்திருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் விசாரணை நடந்து வருகிறது" என்றனர்.