வேளச்சேரி, அண்ணா நகரைச் சேர்ந்தவர் பார்த்திபன், 31. இவர் தனியார் நிறுவனத்தில் மென் பொறியாளராக பணிபுரிகிறார். இவருக்கு கடந்த மாதம் மென் பொறியாளரான பிரியா என்பவருடன் திருமணமானது.
வழக்கம்போல், நேற்று முன்தினம் காலை பணிக்கு செல்வதற்காக, பார்த்திபன் வீட்டில் இருந்து தெருவுக்கு நடந்து சென்றார். அப்போது, வேகமாக வந்த கார் பார்த்திபன் அருகில் நின்றது.
அதில் இருந்த நான்கு பேர், பார்த்திபனை தாக்கி காரில் வலுக்கட்டாயமாக ஏற்றி கடத்தி சென்றனர். தடுக்க முயன்ற அவரது மனைவி பிரியா, தாய் ஆஷா பிந்துவை தாக்கினர்.
காயமடைந்த ஆஷா பிந்துவை மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து பார்த்திபனின் மனைவி பிரியா வேளச்சேரி போலீசில் புகாரளித்தார்.
போலீசார், சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகள் மற்றும் மொபைல் போன் சிக்னலை வைத்து விசாரித்தனர்.
இதில், காஞ்சிபுரத்திற்கு கடத்தி சென்று அடைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அங்கு சென்ற தனிப்படை போலீசார், பார்த்திபனை நேற்று முன்தினம் இரவு மீட்டனர்.
கடத்தலில் ஈடுபட்ட ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 29 வயது இளம்பெண், அவரது தாய் உமா, 50, தாய்மாமன் மகன் ரமேஷ், 39, சித்தப்பா சிவகுமார், 48, ஆகியோர், பார்த்திபனை கடத்தியது தெரிந்தது. அவர்களிடம் போலீசார் விசாரித்தனர்.
பின், போலீசார் கூறியதாவது:
பார்த்திபன், 2013 முதல் 2016ம் ஆண்டு வரை கல்லுாரியில் படித்தார். அப்போது, உடன் படித்தவரை காதலித்துள்ளார். ஒரு கட்டத்தில் இருவரும் பிரிந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த மாதம் பிரியாவை திருமணம் செய்தார். இதில் ஏற்பட்ட ஆத்திரத்தில், அப்பெண் குடும்பத்தினருடன் சேர்ந்து பார்த்திபனை கடத்தியுள்ளார்.
விசாரணையில், இரண்டு தரப்பினரும் சமரசமாக செல்வதாக கூறினர். இதனால், அவர்களது எதிர்காலத்தை கருத்தில் வைத்து வழக்குப்பதிவு செய்யவில்லை.
இவ்வாறு போலீசார் கூறினர்.
இந்த சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்தனர். சிலர், பார்த்திபன் மீது நடந்த இந்த தாக்குதல் மிகவும் கொடூரமானது என்றும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கூறினர். மற்றவர்கள், இந்த சம்பவம் சமூகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து வருவதை காட்டுகிறது என்றும், பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறினர்.