ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை போலீஸ் நிலையத்தில் பெண் காவலராக பணியாற்றி வருபவர் ரூபஸ்ரீ (26). இவருக்கு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தல், கணினி உள்ளிட்ட மின்னணு பொருட்களை பயன்படுத்தும் முறை குறித்த பயிற்சி வகுப்புகளுக்கு செல்லுமாறு காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஆனால் ரூபஸ்ரீ இதற்கு மறுப்பு தெரிவித்துவந்தார். இந்த நிலையில், பயிற்சி வகுப்பில் பங்கு பெற வேண்டும் என நிர்பந்தம் செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த அவர் வாலாஜாவில் உள்ள காவலர் குடியிருப்பு வளாகத்தில் அதிகளவு வைட்டமின் மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனை கண்ட அவரது கணவர் பிரேம்குமார் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து வாலாஜா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதயில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அண்மையில் டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்ட காவல்துறை வட்டாரங்களில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அவரது மரணத்திற்கு காரணம், அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலே என்று கூறப்பட்டது. அதற்கு காரணம் பணிச்சுமையா அல்லது குடும்ப பிரச்னைகளா என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள்.
அவரது தற்கொலையை அடுத்து காவல் துறையில் உள்ள பணிச்சுமை காரணமாக ஏற்படும் மன உளைச்சல் குறித்த விவாதத்தை பெரியளவில் ஏற்படுத்தியது. காவல் துறையில் ஏற்கனவே இருக்கும் பணிச்சுமையால் அந்த துறையில் பணிபுரிபவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது என்றும், அவர்களுக்கு அதற்கு போதிய கவுன்சிலிங் மற்றும் தேவையான சிகிச்சைகளும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
சமூக ஆர்வலர்களும் இதுகுறித்து பேசி வருகிறார்கள். எனவே இதுபோன்ற சம்பவங்கள் காவல்துறையில் மேலும் என்னென்ன பிரச்னைகள் உள்ளது என்பது குறித்து தீவிரமாக ஆய்வு செய்யவேண்டிய அவசியத்தை ஏற்படுத்துகிறது.