வேலூர் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பராமரிப்பு கோட்டம் நிர்வாக பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் வாயிலாக ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திலுள்ள வேலூர் மாநகராட்சி, 11 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள் மற்றும் 944 ஊரக குடியிருப்புகளுக்கு காவிரி ஆற்றிலிருந்து பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது.
தற்சமயம் பொதுப்பணி துறையின் மூலம் வேலூர் அடுத்த சேண்பாக்கம் அருகில் பாலாற்றில் தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது.
இதனால் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் உள்ள பிரதான குழாய்கள் மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதனால் நாளை 8-ந் தேதி முதல் வருகிற 17-ந் தேதி வரை 10 நாட்களுக்கு குடிநீர் வழங்குவதில் தடை ஏற்படும் என தெரிவித்து கொள்ளப்படுகிறது.
எனவே வேலூர் மாநகராட்சி, மேல்விஷாரம், ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜா, அரக்கோணம், ஆரணி ஆகிய நகராட்சி பகுதிகள் வேலூர், அணைக்கட்டு, காட்பாடி, கனியம்பாடி, வாலாஜா, ஆற்காடு ஒன்றிய பகுதிகளில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் உள்ள பிரதான குழாய்கள் சீரமைக்கும் வரை உள்ளாட்சி அமைப்புகள் உள்ளூர் குடிநீர் ஆதாரங்களின் மூலம் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி க்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.