ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி, பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு குறைகளை கேட்டறிந்தார்.
கூட்டத்தில் பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, கூட்டுறவு கடனுதவி, வீடுகள் வேண்டி, மின்சாரத்துறை சார்பான குறைகள், கிராம பொதுப்பிரச்சினைகள், குடிநீர்வசதி, வேலைவாய்ப்பு வேண்டி மற்றும் பொதுநலன் குறித்த மனுக்கள் என 177 மனுக்களை பொதுமக்கள் வழங்கினர்
மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், அவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
வேலூரை சேர்ந்த சரளா (வயது 53) என்பவர் தனது மகள் மற்றும் 3 பேரப்பிள்ளைகளுடன் வசித்து வரும் நிலையில், மறைந்த தனது தந்தைக்கு சொந்தமான ரூ.60 லட்சம் மதிப்புள்ள நிலத்தை, 2-வது மனைவியின் மகன் ராணிப்பேட்டை அடுத்த அவரக்கரையை சேர்ந்த சரவணன் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகவும், அதனை மீட்டுத் தரக்கோரி பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் மனமுடைந்த அவர், குடும்பத்துடன் நேற்று ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு பெட்ரோல் கேனுடன் வந்து தீக்குளிக்க முயன்றனர்.
இதனை கண்ட போலீசார் உடனடியாக அவர்களை தடுத்து நிறுத்தி காப்பாற்றினர். மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
வாலாஜாவை அடுத்த குடிமல்லூர் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த இந்திராணி (47) அளித்த மனுவில் எனது கணவர் பன்னீர்செல்வம் மரம் வெட்டும் கூலி தொழிலாளி. எங்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். ராணிப்பேட்டை அருகில் உள்ள தனியார் பள்ளியில் மரம் வெட்டுவதற்காக எனது கணவரை அழைத்து சென்றனர். அங்கு உயரமான மரத்தில் ஏறி கிளைகளை வெட்டும் போது, தவறி விழுந்து எனது கணவருக்கு படுகாயம் ஏற்பட்டது. வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கணவர் இறந்துவிட்டார்.
இதற்கு பள்ளி நிர்வாகத்தின் அஜாக்கிரதை தான் காரணம். எனவே எனது கணவரை மரம் வெட்ட அழைத்து சென்றவர் மீதும், பள்ளி நிர்வாகத்தினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முரளி, துணை கலெக்டர் வள்ளி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.