ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அருகே உள்ள பாகவெளி கிராமத்தில் பாப்பாத்தி கண்ணியம்மன், திரவுபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில்களில் ஆண்டுதோறும் சித்திரை மாத திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா நடத்துவதில் இரு சமூகத்தினரிடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ராணிப்பேட்டை கோட்டாட்சியர் வினோத்குமார், அரக்கோணம் உதவி போலீஸ் சூப்பிரண்ட யாாதவ் கிரிஷ் அசோக், வாலாஜா தாசில்தார் நடராஜ் ஆகியோர் முன்னிலையில் கடந்த 6-ந் தேதி சமரச பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இரு சமூகத்தினருக்கும் இடையே உடன்பாடு ஏற்படவில்லை.

இதனால் இரு சமூகத்தினரிடையே அமைதியான சூழல் ஏற்படும் வரை கிராமத்தில் எந்த கோவில்களிலும் திருவிழா நடத்தக் கூடாது என தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தற்காலிக தடை உத்தரவை நீக்கக்கோரி மனு அளிக்கப்பட்டது. அதன் மீது விசாரணை மேற்கொண்டதில் பாப்பாத்தி அம்மன் கோவில் சம்பந்தமாக ஒரே சமூகத்தில் வரவு செலவு பார்ப்பதில் கருத்து வேறுபாடு இருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட தகராறு தொடர்பாக தடை உத்தரவு நீடிப்பதால் பாகவெளி கிராமத்தில் போலீசார் குவிக்கபட்டுள்ளனர். வெளியிலிருந்து வரும் ஆட்கள் ஊருக்குள் நுழைவதை தடுக்க போலீசார் தடுப்பு வேலிகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பான சூழல் காணப்படுகிறது.