ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள மேல்விஷாரம் பகுதியைச் சேர்ந்தவர் அருண்பாண்டியன். இவர் மனைவி ஜெயப்பிரியா, வயது 22. இந்தப் பெண் தற்போது ஏழு மாதம் கர்ப்பமாக இருப்பதால், மேல்விஷாரம் பகுதியிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மகப்பேறு சிகிச்சை எடுத்து வந்தார்.
கடந்த மாதம் வழக்கமான பரிசோதனை எடுத்துக்கொண்ட ஜெயப்பிரியாவுக்கு மகப்பேறு நிலைய செவிலியர் பிரேமகுமாரி ‘வைட்டமின் மாத்திரை’ எனச்சொல்லி, ஒரு அட்டை நிறைய மாத்திரைக் கொடுத்திருக்கிறார். கடந்த 25 நாள்களாக இந்த மாத்திரையை உட்கொண்டுவந்த ஜெயப்பிரியா, மாத்திரை தீர்ந்துவிட்டதால் கூடுதல் மாத்திரை வாங்குவதற்காக மகப்பேறு நிலையத்துக்கு வந்தார்.
அங்குப் பணியிலிருந்த வேறு செவிலியரிடம், மாத்திரை அட்டையைக் காட்டியபோது, அந்த செவிலியர் அதிர்ச்சியடைந்திருக்கிறார். ‘இது வைட்டமின் மாத்திரைக் கிடையாது. அல்பென்டசோல் மாத்திரை. அதாவது, ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்து. ஒட்டுண்ணி புழுவால் ஏற்படும் நோய்த்தொற்றுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தும் இந்த மருந்தினை தொடர்ந்து உட்கொள்வதால், பக்க விளைவுகள் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது’ என்று கூறியிருக்கிறார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ஜெயப்பிரியா, கதறி அழுதபடி தன் கணவர், குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார். அவர்கள் கூட்டமாக விரைந்து வந்து, சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு, அங்கிருந்த செவிலியர்கள், பணியாளர்களிடம் கடும் வாக்குவாதம் செய்தனர்.
தகவலறிந்ததும், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மணிமாறன் விரைந்து வந்து பாதிக்கப்பட்ட கர்ப்பிணி குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ``கடந்த பத்து நாள்களுக்கு முன்னர் ஸ்கேன் செய்து பார்த்தபோது, குழந்தையின் சிறுநீரகத்தில் பிரச்னை இருப்பதாக செவிலியர்களே தான் சொன்னார்கள். மாத்திரையை மாற்றிக்கொடுத்ததால்தான் குழந்தையின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டிருக்குமோ..? என்ற சந்தேகமும் ஏற்படுகிறது’' என்று கண்கலங்கியபடி புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து, செவிலியர் பிரேமகுமாரியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மணிமாறன், கர்ப்பிணி ஜெயப்பிரியாவையும், அவரின் வயிற்றில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்தையும் உறுதி செய்து சிகிச்சையளிக்க வேலூர் அடுக்கம்பாறையிலுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தார்.
அதன்படி, 108 ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக ஜெயப்பிரியா வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்தச் சம்பத்தால், மேல்விஷாரம் பகுதியில் பரபரப்பான சூழல் காணப்பட்டது.