திருநெல்வேலி மாவட்டம் முறப்பநாட்டில் அமைந்துள்ள கைலாசநாதர் கோவிலின் நந்தியை வழிபட்டால் நம் வாழ்வில் கஷ்டங்கள் நீங்கும்.

திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி செல்லும் வழியில் முறப்பநாடு என்னும் இடத்தில் அமைந்துள்ளது இந்த கோவில்.

தாமிரபரணி நதி இவ்விடத்தில் தெற்கு நோக்கி தட்சிண கங்கையாக செல்வது தனிச் சிறப்பாகும்.இங்குள்ள கைலாச நாதர் குரு அம்சமாக இருப்பதால் சுவாமிக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி கொண்டைக்கடலை நைவேத்தியம் செய்யப்படுகிறது.

இந்த கோவிலின் சிறப்பான திருவிழாக்களாக சிவராத்திரி மற்றும் பிரதோஷம் ஆகியவை இருக்கின்றன.அதே நேரத்தில் குருப்பெயர்ச்சி விழாவே இந்த கோவிலின் தலையாய சிறப்பு மிக்க விழாவாகும்.

ஏனெனில் தென் தமிழகத்தின் பெரும்பான்மை ஊர்களிலிருந்தும் இந்த கோவிலுக்கு குரு பெயர்ச்சிக்காக வந்து வழிபடுகிறார்கள்.

இந்த தலத்தின் சிறப்பே இது வியாழன் தலம் என்பது ஆகும்.இந்த கோவிலில் சுவாமிக்கு எதிரே இருக்கும் குதிரை முகம் கொண்ட நந்தி மிகவும் சக்தி வாய்ந்தது.இதை வழிபட்டு வேண்டுதலை தெரிவித்தால் குறிப்பிட்ட நாட்களுக்குள் நடந்தேறிவிடுமாம்.மேலும் நம் வாழ்க்கையை சிறப்படையச் செய்யும்.

சோழ மன்னன் ஒருவன்,தனக்கு குதிரை முகத்தோடு பிறந்த பெண்ணின் நிலையைக் கண்டு கவலைக் கொண்டான்.

பல திருக்கோவில்களுக்குச் சென்று சிவபெருமானை வணங்கி பின்பு இங்கு வந்து தட்சிண கங்கை தீர்த்தக் கட்டத்தில் நீராடவும்,குதிரை முகம் நீங்கி மனித முகம் கொண்டு மிக அழகாக தோன்றினாள்.

இங்குள்ள நந்தி,மன்னன் மகளின் குதிரை முகத்தை தான் ஏற்றுக் கொண்டதால் குதிரை முகத்துடனே காட்சியளிக்கிறது.மன்னன் மகிழ்ந்து சிவபெருமானுக்கு இங்கு கோவில் கட்டினான்.

வல்லாள மகராஜா இத் திருக்கோவிலை பெரிதாகக் கட்டி பூஜை காரியங்கள் சிறப்பாக நடைபெற நிலபுலன்கள் எழுதி வைத்தார்.

முறப்பநாடு கைலாசநாதர் கோவில் காலை 7 மணிக்கு திறக்கப்பட்டு,பகல் 12 மணிக்கு அடைக்கப்பட்டு,பின் 4.30 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டு பூசை நடைபெறுகிறது.இரவு பூசைக்கு பிறகு நடை 7.30 மணிக்கு அடைக்கப்படும்.

கைலாசநாதர் கோவிலின் மற்ற தெய்வங்களாக சூரியன்,அதிகார நந்தி,ஜூர தேவர்,சப்தகன்னி,
நாயன்மார்,பஞ்சலிங்கம்,
கன்னி விநாயகர்,வள்ளி மற்றும் தெய்வானையுடன் முருகரும்,சனீஸ்வரரும் இருக்கின்றனர்.

சூரபத்மன் அசுரனின் வழியில் வந்த அசுரன் ஒருவன் முனிவர்களுக்கு செய்த தொல்லையை பொறுக்க முடியாமல் அவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டார்கள்.

சிவபெருமான் திருவுளம் இறங்கி அவர்களுக்கு அருள் செய்தார்.

முறைப்படு நாடு,முறப்பநாடு எனப் பெயர் பெற்றது என்பதை வரலாறாகும்.

நவ கைலாயங்களில் முறப்பநாடு நடு கைலாயமாகும்.

இத்திருத்தலம் குருவுக்கான தலமாகும்.பிருகண்ட முனிவர் பாதம் பட்ட இடமும் காஞ்சனமாலை மோட்சம் பெற்றதும் மார்க்கண்டேயன் பூஜை செய்ததும் இவ்விடமே ஆகும்.

பைரவர் சன்னதியில் இரண்டு பைரவர்கள் இருக்கின்றனர்.நாய் வாகனத்துடன் காட்சி தரும் பைரவர் கால பைரவர் என்றும்,வாகனம் இன்றி காட்சி தரும் மற்றொரு பைரவர் வீர பைரவர் என்றும் அழைக்கின்றனர்.