Cut to father accused of teasing daughters in Ranipet
ராணிப்பேட்டை மாவட்டம், லாலாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சுந்தரேசன் (48). இவர் சிப்காட் பேஸ்-3ல் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 3 மகள்கள், 1 மகன் உள்ளனர். இந்நிலையில் இவரது முதல் மகளும், இரண்டாவது மகளும் வாலாஜாவில் உள்ள அறிஞர் அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் வழக்கம் போல் 2 மகள்களும் நேற்று முன்தினம் மாலை கல்லூரி முடித்து விட்டு லாலாப்பேட்டையில் இருந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது வரும் வழியில் லாலாப்பேட்டை சேர்ந்த அஜித், சரண் ஆகிய இருவரும் கல்லூரி மாணவிகளை கிண்டல் செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மாணவிகள் பெற்றோரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அஜித் மற்றும் சரண் ஆகியோரிடம் சுந்தரேசன் தட்டிகேட்டுள்ளார். அதில் ஆத்திரமடைந்த இருவரும் சுந்தரேசனை தாக்கியுள்ளனர். இதில் அஜித் மறைத்து வைத்திருந்த கத்தியால் சுந்தரேசனின் தலையில் வெட்டியுள்ளார். இதில் ரத்த காயம் அடைந்த சுந்தரேசன் வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் குறித்து சுந்தரேசனின் மனைவி சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அஜித் மற்றும் சரண் ஆகியோரை தேடி வருகின்றனர்.