குழந்தைகளுக்கு டயபர் அணிவிப்பதால், தோலில் அலர்ஜி ஏற்படும். சிறுநீரில் உள்ள உப்புகள் குழந்தையின் தோலில் தடிப்பு மற்றும் வீக்கத்தை ஏற்படுத்துவதோடு, பூஞ்சைத்தொற்றையும் ஏற்படுத்தும். இதனால் யூரினரி இன்ஃபெக்ஷன் வரவும் வாய்ப்பு உண்டு. ஜெல் டெக்னாலஜி உள்ள டயபர் நல்லது என்று சிலர் கருதுகிறார்கள். ஆனால், ஜெல்லில் உள்ள ரசாயனப் பொருட்கள் குழந்தையின் மென்மையான தோலுடன் வினைபுரிந்து அதிகமான அழற்சியை ஏற்படுத்தலாம்.
இரவு நேரங்களில் டயபர் அணிவிக்கும்போது குழந்தை அசௌகரியமாக உணரும். எனவே தளர்வான டயபர்களே சிறந்தவை. தசைகளை இறுக்கிப்பிடிப்பது போன்ற டயபர்களைத் தவிர்க்கவும். பயன்படுத்தியே ஆகவேண்டிய நிலையில் வயதுக்கேற்ற டயபர்களை வாங்கிப் பயன்படுத்தவும். இரண்டு மணிநேரத்திற்கு ஒருமுறை கண்டிப்பாக டயபரை மாற்றவேண்டும். ஒன்றரை வயதைத் தாண்டிய குழந்தைகளுக்கு டயபரைத் தவிர்த்து ‘டாய்லெட் ட்ரெய்னிங்' கொடுக்க வேண்டும்.
நிறைய தாய்மார்கள் டயபருக்கு மேல் பேண்டீஸையும் அணிவிக்கிறார்கள். அது முற்றிலும் தவறு. இதனால் காற்றோட்டம் சுத்தமாகக் கிடைக்காது. இதே மாதிரி தொடர்ந்து அணிவிக்கும்போது குழந்தைகளின் இரண்டு தொடைகளும் விலகி அவர்களுடைய நடையில் மாற்றம் ஏற்படும்.
ஆகையால், சிரமம் பார்க்காமல் முடிந்தவரை குழந்தைகளுக்கு பருத்தியால் ஆன உடைகளை அணவிப்பதே ஆரோக்கியமானது என குழந்தைகள் நல மருத்துவர்கள் கூறுகின்றனர்.