சென்னை: ராணிப்பேட்டையில் ரூ.1,000 கோடியில் 20 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கும் வகையில், காலணி தொழிற்சாலையை தைவான் நிறுவனம் அமைக்க உள்ளது. இதற்கான நில ஒதுக்கீட்டு ஆணை அமைச்சர் தங்கம் தென்னரசு முன்னிலையில் வழங்கப்பட்டது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சியில் நாட்டிலேயே முன்னணி மாநிலங்களில் தமிழகம் ஒன்றாக விளங்கி வருகிறது. தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை முன்னெடுத்து செல்லும் தமிழக முதல்வரின் அயராத முயற்சியின் காரணமாக தமிழகம் மேலும் மேன்மை பெறும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை அரசு துரிதமாக மேற்கொண்டு வருகிறது.

கடந்தாண்டு ஏப்.7-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தைவானைச் சேர்ந்த ஹோங்ஃபூ தொழில் குழுமம், தமிழக அரசின் வழிகாட்டி நிறுவனத்துடன் காலணி தொழிற்சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது.

இதையடுத்து, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு முன்னிலையில், ஹோங்ஃபூ தொழில் குழுமத்தின் தலைவர் டி.ஒய்.சங்க்கிடம் கொள்கை அளவில் நிலம் ஒதுக்கீட்டு ஆணை நேற்று முன்தினம் வழங்கப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் நிலை-1ல் 125 ஏக்கர் நிலம் சிறப்பு பொருளாதார மண்டலத்திலும், 5 ஏக்கர் நிலம் உள்நாட்டு பயன்பாட்டுக்காகவும் வழங்கப்பட்டது. இத்தொழிற் சாலை அமைவதன் மூலம் 17,350 பேருக்கு நேரடியாகவும், 2,650 பேருக்கு மறைமுகமாகவும் என 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்நிறுவனம், அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.1,000 கோடி முதலீடு செய்ய உள்ளது.

இந்நிகழ்ச்சியில், துறையின் செயலர் ச.கிருஷ்ணன், சிப்காட் மேலாண் இயக்குநர் எ.சுந்தர வல்லி, தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவன மேலாண் இயக்குநர் விஷ்ணு, தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் செயல் இயக்குநர் ஆஷா அஜித், சிப்காட் செயல் இயக்குநர் நிஷாந்த் கிருஷ்ணா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.