ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த சிறுனமல்லி கல்லாற்றில் வாலிபர்கள் சிலர் நேற்று மாலை குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, ஆழமான பகுதிக்கு சென்ற ஒருவர் திடீரென நீரில் மூழ்கினார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால், முடியவில்லை. உடனே அரக்கோணம் தீயணைப்பு நிலையம் மற்றும் நெமிலி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஆற்றில் இறங்கி, நீரில் மூழ்கிய வாலிபரை தேடினர். பின்னர், அந்த வாலிபரை சடலமாக மீட்டனர். தொடர்ந்து, நெமிலி போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், நீரில் மூழ்கி இறந்தவர் சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த அஜித்குமார் (24) என தெரியவந்தது. இவர் மற்றும் 5 நண்பர்களும் திருவண்ணாமலையில் உள்ள நண்பர் வீட்டுக்கு சென்றுவிட்டு அங்கிருந்து அரக்கோணம் வந்துள்ளனர். பின்னர், அரக்கோணத்தில் இருந்து ரயில் மூலம் சென்னை செல்ல திட்டமிட்டுள்ளனர். அதற்கு முன்பு, வழியில் உள்ள கல்லாற்றில் குளித்துவிட்டு செல்லலாம் என திட்டமிட்டு வந்து, ஆற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி அஜித்குமார் இறந்தது தெரியவந்தது.