சோளிங்கர் அருகே கூலித்தொழிலாளி வீட்டில் புகுந்து பணம், நகை திருட்டு வழக்கில் தேடப்பட்ட வாலிபரை போலீசார் கைது செய்து, ₹75ஆயிரம், நகைகளை பறிமுதல் செய்தனர்.
சோளிங்கர் அடுத்த நீலகண்டராயன் பேட்டை பகுதியை சேர்ந்தவர் கல்பனா (45), கூலித்தொழிலாளி. இவரது வீட்டில் கடந்த 21ம் தேதி ₹1.50 லட்சம் பணம் மற்றும் ஒன்றரை சவரன் தங்க நகை, வெள்ளி கொலுசு ஆகியவை திருட்டுபோனது. இதுகுறித்து கல்பனா சோளிங்கர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதில் கல்பனாவின் வீட்டில் அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த அஜித்(21) என்ற வாலிபர் நகை, பணத்தை திருடிவிட்டு தலைமறைவாக இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் அஜித்தை தேடி வந்தனர்.
இந்நிலையில் நீலகண்டராயன்பேட்டை மலையடி வாரத்தில் மறைவான இடத்தில் அஜித் பதுங்கியிருப்பதாக போலீ சாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் இன்ஸ் பெக்டர் முருகானந்தம், எஸ்ஐக்கள் ரவி, மோகன் மற்றும் போலீசார் அஜித்தை மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் அஜித்திடமிருந்து ₹75 ஆயிரம் பணம், ஒன்றரை சவரன் தங்க நகை, வெள்ளி கொலுசு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.