ராணிப்பேட்டை மாவட்டத்தில் வேளாண் விளை பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கக்கூடாது என்று மாவட்ட எஸ்பி காவல்துறையினருக்கு உத்தர விட்டுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் முக்கிய தொழிலாக விவசாயம் உள்ளது. இங்கு நெல், வாழை, நிலக்கடலை மற்றும் தானிய வகைகள் ஆகியவை அறூவடை செய்யப் பட்டு அம்மூரில் உள்ள அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மற்றும் ஆற்காடு பகுதியில் உள்ள தனியார் மண்டிகளுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது. அதேபோல், கரும்பும் திருவலம் சர்க்கரை ஆலைக்கு டிராக்டர், லாரி மூலமாக கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில், வேளாண் விளை பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களை நிறுத்தும் போலீசார் அபராதம் விதிப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
குறிப்பாக அரக்கோணம், நெமிலி, சோளிங்கர் உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்களுக்கு அபராதம் விதிப்பதாக குறைதீர்வுநாள் கூட்டத்தில் புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில், வேளாண் விளை பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களை நிறுத்தி அபராதம் விதிக்கக்கூடாது என்று எஸ்பி கிரண் ஷ்ருதி போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், 'ராணிப்பேட்டை மாவட்ட எஸ்பி கிரண் ஷ்ருதி தலைமையில் காவல் கண்காணிப்பு பணிகள் முறையாக மேற் கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், வேளாண் விளை பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்ககளுக்கு அபராதம் விதிப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர். அதனடிப்படையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் வேளாண் விளை பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க கூடாது, என்று அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கு எஸ்பி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அனைத்து காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றனர்.