A private company worker commits suicide after writing a letter
காட்பாடி பிரம்மபுரத்தில் சக ஊழியர்கள் மன உளைச்சல் ஏற்படுத்தியதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு தனியார் நிறுவன தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தனியார் நிறுவன தொழிலாளி
காட்பாடி தாலுகா, பிரம்மபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மோகன் (வயது 42), இவர் ராணிப்பேட்டை சிப்காட்டில் உள்ள டிராக்டர் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி மேகனா என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்த மோகன் இரவு தனிஅறையில் தூங்கினார். மறுநாள் காலையில் குடும்பத்தினர் கதவை தட்டிய போது கதவு திறக்கப்படவில்லை. அதனால் அக்கம்பக்கத்தினர் வந்து கதவை உடைத்து பார்த்தனர். அங்கு மோகன் தூக்குப் போட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக கிடந்தார்.
கடிதம் சிக்கியது
இதுகுறித்து காட்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிணத்தை கைப்பற்றினர்.
பின்னர் பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மோகன் தங்கி இருந்த அறையில் ஒரு கடிதம் இருந்தது. அதனை போலீசார் கைப்பற்றினர்.
அந்த கடிதத்தில் மோகன், தனக்கு கம்பெனியில் சிலர் மன உளைச்சல் ஏற்படுத்தியதாகவும், தனக்கு தொடர்ந்து டார்ச்சர் கொடுத்ததாகவும் சிலரின் பெயரை குறிப்பிட்டிருந்தார். மேலும் அந்த டார்ச்சரால் தான் தற்கொலை செய்து கொள்வதாகவும், வேறு எந்த காரணமும் இல்லை என தெரிவித்திருந்தார்.
இந்த கடிதம் உண்மையிலேயே மோகன் எழுதியது தானா என்பது குறித்து தடய அறிவியல் துறை சோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனால் காட்பாடியில் பரபரப்பு ஏற்பட்டது.