சோளிங்கர் ஒன்றியத்தில் சோலார் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளதை கலெக்டர் நேற்று ஆய்வு செய்தார்.
சோளிங்கர் ஒன்றியம் கொடைக்கல் ஊராட்சியில் கலைஞரின் தரிசு நில மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 20 விவசாயிகளின் 27 ஏக்கர் தரிசு நிலங்கள் மேம்படுத்தப்பட்டு வரும் பணியில், போர்வெல் அமைக்கப்பட்டுள்ளதை ராணிப்பேட்டை கலெக்டர் வளர்மதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து விவசாயிகளுக்கு வேளாண்மை பண்ணை கருவிகள் மற்றும் மரக்கன்றுகளை வழங்கினார். அதைத்தொடர்ந்து கேசவனாங்குப்பம் ஊராட்சியில் சோலார் மூலம் ஆழ்துளை கிணறு செயல்படுவதை பார்வை யிட்டு ஆய்வு செய்தார். பின்னர் விவசாயி ஒருவருக்கு மினி டிராக்டர் வழங்கினார். அப்போது விவசாயத்திற்கு அரசு வழங்கும் விவசாய திட்டங்களை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
ஆய்வின் போது வேளாண்மை இணை இயக்குனர் வடமலை, துணை இயக்குனர் விஸ்வநாதன், தோட்டக்கலை துணை இயக்குனர் லதாமகேஷ், பெருமாள் ராமகிருஷ்ணன், வேளாண்மை உதவி இயக்குனர் பாலாஜி, உழவர் உற்பத்தியாளர் குழு தலைவர் சேகர், வருவாய் ஆய்வாளர் தமிழரசி மற்றும் வேளாண் அலுவலர்கள் உடனிருந்தனர்.