காவேரிப்பாக்கம் அருகே வாழை மரம் வெட்டிய தகராறில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் பாலையாநாயுடு பகுதியை சேர்ந்தவர் பத்மாவதி (50), கூலி வேலை செய்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர். ராஜராஜசோழன் (50), விவசாயி. இவர்கள் இருவருக்கும் கடந்த இரண்டு வருடங்களாக முன்விரோதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பத்மா வதி வீட்டருகே இருந்த வாழை மரத்தை ராஜராஜசோழன் மற்றும் உப்புமேட்டு பகுதியைச் சேர்ந்த மணிமாறன் (48), ஆகிய இருவரும் நேற்று முன்தினம் இரவு வெட்டி உள்ளனர்.
இதனை பார்த்த பத்மாவதி மற்றும் அவரது கணவர் தட்டி கேட்டுள்ளனர். இதில் ஆவேசம் அடைந்த ராஜராஜசோழன் மற்றும் மணிமாறன் ஆகியோர் பத்மாவதியை கைகளால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதுதொடர்பாக பத்மாவதி நேற்று காவேரிப்பாக்கம் போலீசில் புகார் கொடுத்தார்.
புகாரின்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் குமரேசன் வழக்குப்பதிவு செய்து ராஜ ராஜசோழன், மணிமாறன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.