பாணாவரம் அருகே குன்றின் மீது அமைந்துள்ள முருகன் கோயிலுக்கு மயில் அடிக்கடி வந்து தரிசனம் செய்து செல்வது அப்பகுதி மக்களிடையே மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
பாணாவரம் அருகே உள்ள வேடந்தாங்கல் கிராமத்தில் குன்றின் மீது சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.
இங்குள்ள குன்றின் மீது முருகனின் பாதம் பதிந்ததாக கூறப்படும் இடத்திலும், 27 அடி உயரத்தில் உள்ள மலேசிய முருகன் சிலையையும் மற்றும் அழகுற அமைக்கப்பட்ட சரவணப் பொய்கை குளத்தையும் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் தினமும் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். மேலும், இங்கு மாதம்தோறும் கிருத்திகை நாளில் கிரிவலமும் வெகு விமரிசையாக நடந்து வருகிறது.
இந்நிலையில், கோயில் கட்டுமான வேலைகள் தொடங்கியபோது அழகிய வண்ணமயில் அதிசயத்தக்க வகையில் குன்றின் மீது வந்து அமர்ந்துள்ளது.
அதன் பிறகு முருகனின் வாகனமான மயில் நேற்று திடீரென வந்து குன்றின் மீது அங்குமிங்கும் பறந்து சென்றபடி இருந்தது. இதை பார்த்த பக்தர்கள் முருகனை தரிசிக்க மயில் வந்து செல்வதாக கருதி பரவசமடைந்து அரோகரா, அரோகரா என்று முழுக்கமிட்டு வண்ண மயிலை வணங்கினர். சிறிது நேரம் குன்றின் மீது அமர்ந்திருந்த வண்ண மயில் அதன் பிறகு அங்கிருந்து பறந்து சென்றது. முருகப்பெருமானின் வாகனமாக அறியப்படும் மயில் குன்றின் மீது அமர்ந்து முருகனை தரிசிக்க வந்து செல்வது அங்குள்ள பக்தர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.