Collector requests to celebrate Immaculate Bogi festival ahead of Pongal festival
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு மாசற்ற போகிப் பண்டிகையை கொண்டாட வேண்டும், என்று மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழர் திருநாளாம் பொங்கல் நன்நாளின் முதல் நாளான போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. அந்நாளில் பழைய பொருட்களை எரிப்பது என்பது பழமையான கழிதல் என்ற வழக்கத்திற்கான அடையாளமாகும். இந்நாளில் கிழிந்த பாய்கள், துணிகள், தேய்ந்த துடைப்பான்கள், தேவையற்ற விவசாய கழிவுகள் ஆகியவற்றை தீயிட்டு கொளுத்தப்படும்.
நமது கிராமங்களில் கடைபிடிக்கப்படும் இப்பழக்கம் சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால் தற்சமயம் போகிப்பண்டியையன்று மக்கள் நெருக்கம் மிகுந்த நகரங்களில் ரப்பர், பிளாஸ்டிக் மற்றும் செயற்கை பொருட்களை எரிப்பதால் காற்று மாசு ஏற்பட்டு நச்சுப்புகை வெளியேறி புகை மூட்டம் ஏற்பட்டு மக்களுக்கு சுவாச நோய்கள், இருமல், நுரையீரல், கண்பார்வை, மூக்கு எரிச்சல் போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன.
இதனால் நமது நகரம் கருப்பு நகராமாக மாறுகிறது. இதனால் சாலை போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. காற்றை மாசுபடுத்துவது சட்டப் படி குற்றமாகும். பழைய மரம், வறட்டி தவிற வேறு எதையும் எரிக்க உயர்நீதி மன்றம் தடை விதித்துள்ளது. இதனை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். போகிப் பண்டிகை திருநாளில் குப்பைகளை முறைப்படி நகர திட்டக்கழிவுடன் சேர்த்து அப்புறப்படுத்தி பொங்கல் பண்டிகையை காற்று மாசு இல்லாமல் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.