ராணிப் பேட்டை மாவட்டம், ஆற்காடு பெரிய அசேன் புராவை சேர்ந்தவர் நஜீர் அகமது. இவரது மகன் அம்மார் அஹமது(15). அதேபோல் மேல்விஷாரம் பேங்க் தெருவை சேர்ந்தவர் முனீர். இவரது மகன் முதாசிர் அஹமது (15). இருவரும் மேல்விஷாரத்தில் உள்ள ஒரு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகின்றனர்.
அரையாண்டு விடுமுறை முடிந்து நேற்று முன்தினம் பள்ளி திறக்கப்பட்டது. மாணவர்கள் இருவரும் காலையில் பள்ளிக்குச் சென்றுள்ளனர். இந்நிலையில் உணவு இடைவேளையில் பள்ளியிலிருந்து வெளியே வந்த மாணவர்கள் திடீரென மாயமானார்கள்.
மேலும், மாணவர்கள் இரவு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த இரண்டு மாணவர்களின் பெற்றோர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து முனீர் ஆற்காடு டவுன் போலீசில் நேற்று புகார் செய்தார்.
அதன் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் மகாராஜன் வழக்கு பதிவு செய்து காணாமல் போன 2 பள்ளி மாணவர்களை தேடி வருகின்றனர். மேலும், மாணவர்கள் கடத்தப்பட்டார்களா அல்லது வேறு ஏதாவது காரணமா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.