VAO arrested in case of Rs 8 crore fraud in paddy purchase in Arcot


தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.

இவ்வாறு கொள்முதல் செய்யப்படும் நெல்லை அனுமதி பெற்ற அரிசி அரவை ஆலைகளுக்கு அனுப்பி அரிசியாக மாற்றி பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேசன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கட்டுப்பாட்டில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நெரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கடந்த 2020-ம் ஆண்டு நெல் கொள்முதலில் முறைகேடுகள் நடைபெற்றது தெரியவந்தது.

இதுதொடர்பாக வேலூர் சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில், ராணிப்பேட்டை மாவட்ட நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் பயன்பெறாமல் இடைத்தரகர்கள், வியாபாரிகள், அதிகாரிகள் சேர்ந்து அரசுக்கு ரூ.8 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் வழக்குப் பதிவு செய்த சிபிசிஐடி போலீசார் இதுவரை 32 பேரை கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில் ஆற்காடு அருகே உள்ள கத்தியவாடி கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியன் என்பவர் நெல் கொள்முதல் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

ஆற்காடு மாசா பேட்டையில் உள்ள வீட்டில் இருந்த பாலசுப்பிர மணியனை நேற்றிரவு சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.இதனால் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.