ஆற்காடு பகுதியில் கடுமையான பனிப்பொழிவால் நேற்று காலை பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெரிதும் அவதிப்பட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் மாண்டஸ்புயல் எதிரொலியால் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்தது. மேலும் நேற்று முன்தினம் காலை லேசான பனிப்பொழிவு காணப்பட்டது.
இந்நிலையில், நேற்று அதிகாலை முதல் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டது. ஆற்காடு பஸ் நிலையம், பைபாஸ் சாலை, பாலாற்று பழைய மற்றும் புதிய பாலங்கள், ஆரணி சாலை, செய்யாறு பைபாஸ் சாலை, விஷாரம் பைபாஸ் சாலை வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டதால் முகப்பு விளக்கை எரியவிட்டபடி மெதுவாக ஊர்ந்து சென்றன.
மேலும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் காலையில் வேலைக்கு செல்பவர்கள். சிறப்பு வகுப்புகளுக்கு செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் இந்த கடுமையான பனிப்பொழிவால் பெரிதும் அவதிப்பட்டனர்.
மேலும், ஆற்காடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு விளையாட்டு மைதானம் உள்ளிட்ட பகுதிகளில் காலையில் நடை பயிற்சிக்கு சென்ற பொது மக்கள் பலர் பாதியிலேயே நடை பயிற்சியை முடித்துக் கொண்டு திரும்பிச் சென்றனர். பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பஸ்கள் தெரியாத அளவிற்கு கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டது. காலை 8 மணி வரை நீடித்த இந்த பனிப்பொழிவு பின்னர் படிப்படியாக குறைந்தது.