World Important Days...: 

உலக தேயிலை தினம் டிசம்பர் 15.
திரைப்படங்களில் வரும் பாடல் காட்சிகள் என்றாலே சுற்றிலும் பசுமை நிறைந்த காட்சிகளைத் தான் நிறையக் காண்பிப்பார்கள். எவ்வளவு குளுமையான இடம், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சை பசேல்… என்று மெய் சிலிர்த்து பார்த்துக் கொண்டிருப்போம். அப்படிக் காட்டப்படும் இடங்களில் டீத் தோட்டமும் ஒன்று. மலை முகடுகளில் நெருக்கமாக வளர்ந்து நிற்கும் டீ செடிகளால் மலைக்கே ஏதோ பச்சைப் போர்வை போர்த்தியது போல இருக்கும். தூரத்திலிருந்து பார்க்கும் நாம் தான் அதனை ரசித்துக் கொள்ள வேண்டும். உண்மையில் அங்கிருக்கும் மக்கள் குறிப்பாக டீ தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் என்னென்ன பாதிப்புகளை சந்திக்கிறார்கள் தெரியுமா?

டயர்டாக இருக்கிறதென்றும்… தலைவலிக்கிறது என்றும் நினைத்த நேரத்தில் டீ சாப்பிடும் பழக்கம் உடையவர்கள் நம்மில் பலர் இருக்கிறார்கள். ஆனால் டீயை விளைவித்து அதனை மக்களின் பயன்பாட்டிற்காக அனுப்பி வைத்திடும் தொழிலாளர்கள் பலர் இன்றளவும் பட்டினியால் செத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான் உண்மை.

இன்றைக்கு பன்னாட்டு தேயிலை நாளாக அனுஷ்டிக்கப்படுகிறது. மற்ற தொழிலாளர்களை விட இந்த தொழிலாளர்களின் பிரச்சனை முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது. இவர்களது பிரச்ச னையை வெளிப்படுத்த தனியான ஒரு நாள் வேண்டுமென்று ஆலோசிக்கப்பட்ட போது, அசாம் தேயிலைத் தோட்டத்தில் இருந்த சீன ஒப்பந்த தொழிலாளர்கள் 1838 ஆம் ஆண்டு திசம்பர் பதினைந்தாம் நாள் முதலாவது சம்பளப் போராட்டத்தினை மேற்கொண்டார்கள். அதன் நினைவாக ஆண்டு தோறும் டிசம்பர் பதினைந்தாம் நாள் சர்வதேச தேயிலை தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது.

இன்று உலகில் தண்ணீருக்கு அடுத்த படியாக உலக மக்களால் அதிக அளவில் அருந்தப்படும் பானமாக தேநீர் உள்ளது. தேயிலையை சர்வ நோய் நிவாரணி பானமாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தமையினால் இன்று உலகின் அனைத்து நாடுகளும் தேநீரைப் பருகும்படி தம்நாட்டு மக்களை ஊக்குவித்து வருகின்றன. எனவே தேயிலை உற்பத்தியின் தேவை மக்கள்தொகை அதிகரிப்பிற்கேற்ப அதிகரித்துச் செல்லவேண்டிய தேவை உள்ளது. எனவே, தேயிலை உற்பத்திற்கான சூழலைக் கொண்டுள்ள நாடுகள் தேயிலை உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றன.

அறுபதுகளுக்கு முன்பதாக சீனா, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட சில நாடுகளே தேயிலையை உற்பத்தி செய்து வந்தன. ஆனால் இன்று உலகின் 58 நாடுகள் தேயிலை உற்பத்தி யில் ஈடுபட்டு வருகின்றன. சர்வதேச தேயிலை தொழிலாளர் மாநாடு ஒன்றின் தொடர்ச்சியாக 2005 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிரேஸிலின் போர்டே அல்க்கிரியில் உலக சமூக மாமன்ற கூடுதல் நிகழ்வு நடந்தது. இந்த நிகழ்வில் ஆங்கிலேயரின் ஆட்சியில் முதலாவது இந்திய அஸாம் தேயிலைத் தோட்டத்தில் சீன நாட்டைச் சார்ந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் 1838 டிசம்பரில் நடத்திய முதலாவது சம்பளப் போராட்டத்தினை நினைவு கூறும் விதமாக சர்வதேச தேயிலைத் தினமாக டிசம்பர் 15 ஆம் தேதியை அறிவிக்கலாம் என்று முடிவு செய்தனர். இதன் தொடர்ச்சியாக முதலாவது சர்வதேச தேயிலை தின மாநாடு புது டெல்லியில் 2005 டிசம்பர் 15 அன்று நடந்தேறியது.

ஆனாலும் பரந்த விரிந்த கண்ணைக் கவரும் பசுமை, சில்லென உடல் வருடும் குளிர்காற்றென மலைப் பிரதேசங்களின் நினைவே நமக்குப் பரவசமூட்டுவதாய் அமைகின்றன. ஆனால், அவற்றின் மறுபுறத்தில், அகண்ட பள்ளத்தாக்குகளில் தலைமுறைகளாய் உழைத்தும் தலையெடுக்க வழியின்றி கொத்தடிமைகளாக உழலும் பல இலட்சம் தோட்டத் தொழிலாளர்களின் இருள் நிறைந்த வாழ்வோ நம்மால் அறியப்படாமலே கிடக்கின்றது, நூறாண்டுகள் கடந்த பின்பும்.

பச்சைப் போர்வையென பல்லாயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பரந்துகிடக்கும் தேயிலைத் தோட்டங் கள், நெடிதுயர்ந்த கழுகு மரங்கள், காய்த்துக் குழுலுங்கும் மிளகு, ஏலக்காய், காப்பித் தோட்டங்கள், பால்வடியும் இரப்பர் மரங்களென இமயத்தின் அடிவாரந்தொட்டு தென்குமரி வரையிலான மலைத் தோட்டங்கள் அனைத்திலும் நிறைந்து, மறைந்து, உறைந்து கிடக்கிறது பல இலட்சம் கூலித் தொழிலாளர்களின் பல்லாண்டுகால உழைப்பு.

வெள்ளையர்களின் காலனியச் சுரண்டல் ஆட்சியின் கீழ், செழிப்பான மலைப்பிரதேசங்களில் தேயிலை, மிளகு, காப்பி உள்ளிட்ட பணப்பயிர் வளர்த்துக் கொள்ளை இலாபம் ஈட்டிய ஆங்கிலேய முதலாளிகளால் வதைத்துக் கொல்லப்பட்டோர் ஏராளம். இலங்கை, பர்மா, மலேசியா உள்ளிட்ட தனது காலனி நாடுகளின் தேயிலைத் தோட்டங்களில் கூலி வேலை செய்வதற்காக மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி உள்ளிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பல ஆயிரம் தாழ்த்தப்பட்ட மக்களை அடிமைகளாக இழுத்துச் சென்றனர் வெள்ளை முதலாளிகள். வறண்டு போன பூமியில் வாழ வழியின்றி ஆண்டு முழுவதும் வேலை, நல்ல வருமானம் என்ற ஏஜென்டுகளின் பேச்சில் மயங்கி, பசி, பட்டினிக் கொடுமைகளிலிருந்து தப்பித்துப் பஞ்சம் பிழைக்க மலைப் பிரதேசங்களை நாடி வந்தவர்களை எதிர்கொண்டதோ நரக வாழ்க்கை.

மலைத் தோட்டப் பயிர்களில் பிரதானமானது தேயிலை, அஸ்ஸாம், மேற்கு வங்கம், திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களின் இமயமலை அடிவாரத்திலும், கர்நாடகம், கேரளம் மற்றும் தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் பரவிக் கிடக்கின்றன தேயிலைத் தோட்டங்கள், உண்ண உணவின்றி, உடுத்த உடையின்றி, தங்க இடமின்றி, நோய்க்கு மருந்தின்றி கொத்தடிமை வாழ்வில் அடக்கி, ஒடுக்கி, ஒட்டச் சுரண்டப்பட்டு, அரைவயிற்றுக் கஞ்சியுடன் கடுங்குளிரிலும், சுட்டெரிக்கும் வெயிலிலும் உழைத்துக் களைத்து, இளைத்துப்போய் இற்றுவீழும் உழைக்கும் மக்களின் உடல்களில் உரம்பெற்றுத் தழைத்து நிற்கின்றன தேயிலைச் செடிகள்; கொழுத்துக் கிடக்கின்றனர் இந்தத் தேயிலை எஸ்டேட்டுகளுக்குச் சொந்தக்காரர்களான பன்னாட்டு முதலாளிகளும், டாடா, வாடியா, கோத்ரெஜ் உள்ளிட்ட தரகு முதலாளிகளும்.

இந்தியா முழுவதிலும் சுமார் 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் உள்ளனர். தமிழகத்தில் நீலகிரி, ஆனைமலை உள்ளிட்ட எஸ்டேட்டுகளில் இரண்டு இலட்சத்திற்கும் மேற் பட்டோர் பணிபுரிகின்றனர். நம் அனைவருக்கும் புத்துணர்ச்சியூட்டும் தேயிலையை உற்பத்தி செய்யும் இந்தத் தொழிலாளர்களின் வாழ்க்கையிலோ அவலச் சுவை மண்டிக்கிடக்கிறது.

அதிகாலையில் எழுந்து சமைத்து முடித்து, இருள் அகலும் முன்பே கிளம்பி நடந்து சென்று மலையேறி காலை 8 மணிமுதல் மாலை 5 மணி வரை இடைவேளையின்றித் தேயிலைக் கொழுந்துகளைப் பறித்து, ஆலைக்கு எடுத்துச் சென்று எடைபோட்டு முடிப்பதற்குள் இரவாகி விடும். பின்னர் இரவு உணவுக்கான சமையல் வேலைகள். இடைப்பட்ட மிகக்குறைவான நேரத்தில்தான் கண்ணயர முடியும்.

இப்படி இரவு, பகல் பாராமல் ஒய்வு, ஒழிச்சலின்றிப் பாடுபடும் இவர்களுக்கு வழங்கப்படும் கூலியோ அரை வயிற்றுக் கஞ்சிக்குக் கூடப் போதுமானதாக இருப்பதில்லை. சத்தான உணவின்மை, நோய் வாய்ப்படுதல் போன்றவற்றால் தொழிலாளர்கள் தொடர்ச்சியாக வேலைக்குச் செல்ல முடிவதில்லை. மாதத்தில் அதிகபட்சமாக 20 நாட்கள் மட்டுமே வேலை செய்ய முடிகின்ற நிலையில் கணவனும்,மனைவியுமாக குடும்பமே பாடுபட்டாலும் மாதக் கூலியாக அவர்கள் பெறும் தொகை பத்தாயிரத்தைத் தாண்டுவதில்லை. அதிலும் பல்வேறு பிடிமானங்கள் போக சொற்பத் தொகையே கைவந்து சேருகிறது. இதைக் கொண்டு வாழ்க்கைத் தேவைகளைச் சமாளிக்க முடியாத தொழிலாளர்கள் கந்துவட்டிக்கு கடன் பெற்றே காலம் தள்ளுகின்றனர். மறுபுறத்தில், அற்பக் கூலிக்கு தொழிலாளர்களை ஒட்டச் சுரண்டும் எஸ்டேட் முதலாளிகளோ கோடிகளில் இலாபத்தை வாரிச்சுருட்டுகின்றனர்.

தேயிலை பறிக்கும் பணியில் பெண்கள் மட்டுமே ஈடுபடுத்தப்படுகின்றனர். வெயிலிலும், மழையிலும் காலையிலிருந்து மாலைவரை நின்றபடியே, அட்டைக்கடியையும், உண்ணிக் கடியையும் தாங்கிக் கொண்டு, முதுகில் பாரத்தையும் சுமந்தகொண்டு, கொழுந்து பறிக்க வேண்டும். சிறிது நேரம்கூட ஓய்வெடுக்க முடியாது. மதிய உணவுக்கு மட்டுமே சிறிது இடை வேளை உண்டு. மற்றபடி இயற்கை உபாதைகளுக்கு ஒதுங்கினால்கூட கங்காணிகளின் ஏச்சுக்கும், பேச்சுக்கும் ஆளாக நேரிடும். இவ்வாறு தொடர்ச்சியாக நின்றுகொண்டே வேலைசெய்வதால் ஏற்படும் மூட்டுவலி, போதிய பாதுகாப்புக் கவசங்களின்றி வேலைசெய்ய நிர்ப்பந்திக்கப் படுவதாலும், உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் போன்ற நச்சு இராசயனங்களாலும் ஏற்படும் தலைவலி, நரம்புக் கோளாறுகள், மார்புவலி, கருச்சிதைவு, சிறுநீரக, கருப்பைக் கோளாறுகள் போன்ற பல்வேறு நோய்களுக்கு இரையாக்கப்படுகின்றனர் தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் பெண் தொழிலாளர்கள். ஆனால், இவற்றிற்கெல்லாம் உரிய சிகிச்சை அளிப்பதற்கான எவ்வித மருத்துவ வசதிகளையும் ஏற்படுத்தித் தருவதில்லை முதலாளிகள். இதுதவிர, பாம்புக்கடி, வனவிலங்குகளால் தாக்கப்படுதல், விபத்துகள் உள்ளிட்ட எதற்கும் உரிய மருந்துகளோ பெயரளவுக்கு நடத்தப்படும் எஸ்டேட் மருத்துவமனைகளில் இருப்பதில்லை. எனவே, தோட்டத்தொழிலாளர்கள் தங்களது சொற்ப வருமானத்திலும் கணிசமான தொகையை மருத்துவத்திற்காகச் செலவளிக்க வேண்டியுள்ளது.

பனியிலும், மழையிலும், வெயிலிலும் வாடி வதங்கி, வேலைசெய்துவிட்டுச் சோர்வுடன் திரும்பும் இந்தத் தொழிலாளர்கள் தங்கி, உண்டு, உறங்கி ஓய்வெடுக்கத் தரமான வீடுகள் எதுவும் கிடையாது.ஆங்கிலேய முதலாளிகள் காலந்தொட்டு இன்றுவரையிலும் லைன் வீடுகள் எனும் கொட்டடிகளில் தான் வதைபடுகிறது இவர்களது வாழ்க்கை. ஆஸ்பெஸ்டாஸ் எனும் நச்சுக் கூரையால் மூடப்பட்ட இத்தகரக் கொட்டகைகளில் பல்லாண்டுகளாக வாழ நிர்ப்பந்திக்கப்படும் தொழிலாளர்களில் பலர் புற்று நோய்க்கு ஆட்பட்டு மாண்டுபோகும் அவலங்களும் தொடர்கின்றன. மேலும், இந்த ஒண்டுக் குடித்தனமும் இவர்களுக்குச் சொந்தம் கிடையாது. 58 வயதில் பணியிலிருந்து நீக்கி, குடியிருப்புகளிலிருந்து தொழிலாளர்களை வெளியேற்றி வீடற்ற அநாதைகளாக நிறுத்துகின்றனர் முதலாளிகள்.

தோட்டத் தொழிலாளர்களில் பெரும்பான்மையோர் கல்வியறிவற்றவர்கள்; ஐந்தாம் வகுப்புவரை படித்தவர்கள் மிகச்சிலர் மட்டுமே. இந்நிலையில், இவர்களது குழந்தைகளின் கல்விக்காக போதிய உட்கட்டமைப்புகள், ஆசிரியர்களைக் கொண்ட பள்ளிக்கூடங்கள் எதுவும் எஸ்டேட்டுகளில் கிடையாது. எனவே, தங்களது குழந்தைகளின் எதிர்கால நலன்கருதி வெளியுரில் படிக்க வைப்பதால், தனியார்பள்ளி முதலாளிகளின் கட்டணக் கொள்ளைக்கும் இரையாக்கப்படுகின்றனர், இத்தொழிலாளர்கள். இப்படி வெளியூர்களில் தங்கிப் படிக்கவைக்க முடியாத நிலையிலுள்ள தொழிலாளர்களின் குழந்தைகளோ, குடும்ப பாரத்தைச் சுமக்க வேண்டி, தாயுடன் தேயிலை பறிக்கும் வேலையில் ஈடுபடுத்தப்பட்டு, இளமையிலேயே சிறகுகள் முறிக்கப்பட்டு, மீண்டும் அடிமை வாழ்விலேயே புதைக்கப்படுகின்றனர்.

இன்றைய மறுகாலனியாக்கச் சூழலில் தோட்டத்தொழிலாளர்களின் வாழ்கை நெருக்கடிகள் மென்மேலும் முற்றிப்போயுள்ளன. தனியார்மய தாராளமய-உலகமயக் கொள்கையின் விளைவாக தேயிலை இறக்குமதியின் மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து சந்தையில் பச்சைத் தேயிலையின் கொள்முதல் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இதனை சாதகமாகக் கொண்டு தொழிலாளர்கள் மீதான சுரண்டலைத் தீவிரப் படுத்தியுள்ளனர், எஸ்டேட் முதலாளிகள். நிரந்தரத் தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறைத்து காண்ட்ராக்ட் தொழிலாளர்களைப்பணிக்கு அமர்த்தி வருகின்றனர். ஒரிஸ்ஸா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட வடமாநிலத் தொழிலாளர்களை ஒப்பந்தப் பணிக்கு அமர்த்தி,நிரந்தரத் தொழிலாளர்களைப் போல இருமடங்கு பணிச்சுமையை அவர்கள் மீது திணித்து கொடூரமாகச் சுரண்டுகின்றனர். ஆனால், வழங்கப்படுவதோ அற்பக்கூலி, இந்த அற்பக்கூலியைக் கூட முறையாக வழங்காமல், விலை வீழ்ச்சியைக் காரணம் காட்டி, மாதக்கணக்கில் இழுத்தடித்து, தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கின்றனர்.

இந்த விலை வீழ்ச்சி என்பதே முதலாளிகளின் கூட்டுக் களவாணித்தனத்தின், சதியின் விளைவாக, செயற்கையாகத் தோற்றுவிக்கப்பட்ட ஒன்றுதான். தேயிலை உற்பத்தியிலும், விற்பனையிலும் ஈடுபடுகின்ற டாடா போன்ற தரகு முதலாளிகளும், பன்னாட்டு முதலாளிகளும் தேயிலை உற்பத்திக்கும், தேயிலையைத் தூளாக மாற்றி விற்பதற்குமென தனித்தனியாக வெவ்வெறு பெயர்களில் நிறுவனங்களை உருவாக்கிக் கொள்கின்றனர். இவர்கள் தங்களுக்குள் கள்ளக்கூட்டை (cartels, syndicates) உருவாக்கிக்கொண்டு திட்டமிட்டே பச்சைத் தேயிலையைக் குறைவான விலையில் கொள்முதல் செய்கின்றனர். பின்னர் விலை வீழ்ச்சியைக் காரணம் காட்டி தொழிலாளர்களின் மீதான பணிச்சுமையை அதிகரிப்பது, கூலியைக் குறைப்பது, சம்பளம் தராமல் இழுத்தடிப்பது, காண்ட்ராக்ட் தொழிலாளர்களைப் பணிக்கமர்த்துவது என்று உழைப்பவர்களைச் சுரண்டுகின்றனர். மறுபுறத்திலோ, மிக அதிகமான விலைக்குத் தேயிலை தூளை விற்று கொள்ளை இலாபம் ஈட்டுகின்றனர்.

இந்த செயற்கை விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட, தேயிலை உற்பத்தியில் மட்டுமே ஈடுபட்டு வந்த பல சிறிய, நடுத்தர எஸ்டேட் முதலாளிகள் நட்டம் ஏற்படுவதாகக் கூறி எஸ்டேட்டுகளை இழுத்து மூடிவருகின்றனர். இதுநாள்வரை தங்களுக்காக உழைத்து, கோடிகளில் இலாபத்தை ஈட்டித்தந்த தொழிலாளர்களை நடுத்தெருவில் நிறுத்துகின்றனர். மேற்கு வங்கம், அஸ்ஸாம் போன்ற மாநிலங்களில் இப்படித்திடீரென இழுத்து மூடப்பட்ட எஸ்டேட்டுகளால் வாழ்விழந்த தொழிலாளர்கள் பலர் பசியிலும், பட்டினியிலும் வாடி கொத்துக் கொத்தாக மடியும் கொடூரமும் அரங்கேறி வருகிறது.

தோட்டத் தொழிலாளர் சட்டம் 1951, குறைந்த பட்ச ஊதியம் சட்டம் 1948, தொழிற் தகராறுகள் சட்டம் 1947, காண்டிராக்ட் தொழிலாளர்கள் முறைபடுத்தல் மற்றும் ஒழிப்புச்சட்டம் 1970, உள்நாட்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நலச் சட்டம் 1979 உள்ளிட்ட தோட்டத் தொழிலாளர்களின் நலனுக்கான சட்டங்கள் அனைத்தையும் குப்பையென ஒதுக்கித் தள்ளியுள்ளனர், முதலாளிகள். இச்சட்டங்களை அமல்படுத்த மறுக்கும் முதலாளிகள் மீது சிறு துரும்பைக்கூடக் கிள்ளிப் போடாமல் வேடிக்கை பார்க்கிறது அரசு. பெருமளவிலான தொழிலாளர்களை அணிதிரட்டியுள்ள போலிக் கம்யூனிஸ்டுகளின் தொழிற்சங்களோ முதலாளிகளின் எச்சில் காசுக்கு வாலாட்டிக் கொண்டு தொழிலாளிகளுக்குத் துரோகமிழைக்கின்றன. போலிகளின் முகத்திரை கிழித்தெழுந்த மூணாறு தேயிலைத் தோட்டப் பெண் தொழிலாளர்களின் தன்னெழுச்சியான போராட்டமும் சித்தாந்த வலுவின்றிப் போனதால் கோரிக்கைகளை முழுமையான நிறைவேற்ற முடியாமல் முட்டுச்சந்தில் முடங்கிப்போனது. தற்போது இருக்கின்ற சட்டங்களையும் திருத்தி, தொழிலாளர் களை போராடிப்பெற்ற உரிமைகளைப் பறித்து, அவர்களைக் கொத்தடிமைகளாக மாற்றும் வேலைகளில் சதித்தனமாக ஈடுபட்டு வருகிறது பாசிச மோடி அரசு.

சட்டங்கள் அனைத்தும் செல்லாக் காசுகளாகிவிட்டன. பிழைப்புவாதிகளின், போலிக் கம்யுனிஸ்டுகளின் தொழிற்சங்களோ கங்காணிகளாக மாறி நிற்கின்றன; ஆங்கிலேயன் காலத்தில் பூட்டப் பட்ட அடிமை விலங்கோ அகற்றப்படாமலேயே கிடக்கிறது இன்றுவரை. தமது வாழ்க்கை யைச் சிதைத்துச் சூறையாடும் பன்னாட்டு, இந்தியத் தரகு முதலாளிகளையும், அவர்களைத் தாங்கி நிற்கும் இந்தப் போலி ஜனநாயக அரசமைப்பையும் தாக்கித் தகர்த்து, தூக்கியெறியும் வகையிலான போராட்டங்களைக் கட்டிமைப்பதன் வாயிலாகவே தோட்டத் தொழிலாளர்கள் தங்களைப் பிணைத்துள்ள கொத்தடிமைத் தளையை அறுத்தெறிய முடியும்.

எக்ஸ்ட்ரா ரிப்போர்ட் :✍?


•☕உலகம் முழுவதும் 1500 தேநீர் வகைகள் உள்ளன.

•☕சீனாவில் உள்ள ஹூனான் பிரதேசம்தான் தேயிலையின் பிறப்பிடமாகக் கருதப்படுகிறது. அங்கு கிடைத்த 800 ஆண்டுகள் பழமையான தேயிலைச் செடிகளை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர்.

☕•சீனாவில் கிரீன் டீ தேசிய பானமாகும்.

•☕உலகிலேயே அதிகமாகத் தேநீர் பருகுபவர்கள் உள்ள நாடு இந்தியாதான். நாட்டின் தேயிலை உற்பத்தியில் 80 சதவீதத்தையும், உலக உற்பத்தியில் 20 சதவீதத்தையும் ருசிப்பவர்கள் இந்தியர்கள்தாம்.

•☕இந்தியாவில் அசாம், டார்ஜிலிங், வட வங்காளம் மற்றும் நீலகிரி டீ வகைகள் அதிகமாகக் கிடைக்கின்றன.

•☕சாதாரண டீயுடன் சேர்ந்து இப்போது ஆர்கானிக் டீ, கிரீன் டீ, ஒயிட் டீ, ஹுலாங் டீ, ஃபிளேவர்டு டீ, டீ காஃப் டீ, ஹெர்பல் டீ போன்ற மருத்துவப் பயன்பாடுள்ள தேநீர் வகைகளும் இப்போது கிடைக்கின்றன.

•☕ஷன்ஷா, கியமாகரோ, ஜென்மாய்ஷா, மேட்ஷா, பன்ஷா, குகிஷா, ஹங்ஜிஷா இவையெல்லாம் என்ன என்று கேட்கிறீர்களா? ஜப்பானில் கிடைக்கும் புகழ் பெற்ற டீயின் பெயர்கள்.

•☕உலகத்தில் ஜப்பானியர் மட்டுமே சா நோ ஹூ என்ற டீ விழா எடுக்கிறார்கள். தேநீர் உடல் நலத்துக்கு மட்டுமல்ல, ஆன்மீக நலனுக்கும் உகந்தது என்பது அவர்களுடைய நம்பிக்கை.

•☕தேநீரைப் பற்றியும், தேயிலைத் தொழிலைப் பற்றியும் தெரிந்து கொள்வதற்கென்றே ஓர் இதழ் வெளிவருகிறது. பெயர்: டீ தி மகஸின். இந்த ஆங்கில இதழின் நிறுவனரான பேர்ஸ் டெக்ஸ்டர் என்ற பெண்மணி ஒரு பள்ளிக்கூடத்தைத் தொடங்கினார். அதற்குப் பெயர்: தி டீ ஸ்கூல்.