ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு உதவ அயலக தமிழர் நலத்துறை ஏற்படுத்தப்பட்டுள்ளது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு உயர் தொழில் நுட்ப கல்வி பயின்ற இளைஞர்களை தாய்லாந்து, மியான்மர், கம்போடியா நாடுகளில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் டிஜிட்டல் சேல்ஸ் அண்ட் மார்க்கெட்டிங் எக்ஸிகியூடிவ் வேலை, அதிக சம்பளம் என்கிற பெயரில் சுற்றுலா விசாவில் ஏமாற்றி அழைத்து சென்று கால்சென்டர் மோசடி மற்றும் கிரிப்டோ கரன்சி மோசடி போன்றவற்றில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தப் படுவதாகவும், அவ்வாறு செய்ய மறுப்பவர்களை துன்பு றுத்துவதாகவும் தகவல் பெறப்பட்டுள்ளது.
இது போன்ற மேசடிகளை தவிர்க்க, வெளிநாடுகளுக்கு வேலை நிமித்தமாக செல்லும் இளைஞர்கள் ஒன்றிய அரசால் பதிவு செய்யப்பட்ட முகவர்கள் மூலம் வேலைக்கான விசா, முறையான பணி ஒப்பந்தம், பணி விவரங்கள் சரியாக தெரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு பணிகள் குறித்த விவரம் தெரியாவிட்டால், தமிழ்நாடு அரசு அல்லது சம்பந்தப்பட்ட நாட்டில் உள்ள இந்திய தூதரகங்களை தொடர்பு கொண்டு பணி செய்யப் போகும் நிறுவனங்களின் உண்மை தன்மையை உறுதி செய்துகொள்ள வேண்டும். ஒன்றிய அரசின் வெளி உறவுத்துறை மற்றும் வேலைக்கு செல்லும் நாட்களில், இந்திய தூதரங்களின் இணையதளங்களில் வெளியிடப்படும் அறிவுரைகளின்படி வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல வேண்டும்.
வெளிநாடுகளில் உள்ள தமிழர்களுக்கு உதவி புரியும் பணியில் தமிழக அரசின் அயலக தமிழர் நலத்துறை ஈடுபட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.