சோளிங்கர் அடுத்த வடக்கு பரவத்துாரைச் சேர்ந்தவர் சத்யநாதன் (55), கூலித்தொழிலாளி. இவர் மனைவி ஜீவா (50). இவர்களது மகள் கலைவாணி (28) என்பவருக்கும், அரி கலப்பாடியைச் சேர்ந்த பாரதிராஜா என்பவருக்கும் 7 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் தம்பதியருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கலைவாணி, கணவருடன் கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இதையடுத்து, பாரதி ராஜா அங்கு சென்று தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு மனைவியை அழைத்துள்ளார். ஆனால் கலைவாணி வர மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த பாரதிராஜா, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மனைவியை வெட்ட முயன்றார்.
அதை தடுத்த ஜீவாவின் வலது கைவிரலில் ஒரு பகுதி துண்டானது. மேலும் கையிலும் வெட்டு விழுந்தது. தடுக்கவந்த சத்யநாதனுக்கும் இடுப்பின் கீழ் பகுதியில் வெட்டு விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டது.
சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அங்குவந்து 2 பேரையும் மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து சத்யநாதன் சோளிங்கர் போலீசில் கொடுத்த புகாரில், பாரதி ராஜாவின் தம்பிகள் தாமு, அருணாசலம் ஆகியோரின் தூண்டுதலின்பேரில் தன்னையும், தன் மனைவியையும் பாரதிராஜா வெட்டியதாக குறிப்பிட்டுள்ளார்.
அதன்பேரில் சோளிங்கர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருணா சலத்தை கைது செய்தனர். மேலும், பாரதிராஜா மற்றும் தாமு ஆகியோரை தேடிவருகின்றனர்.