ஒவ்வொரு ஆண்டுமே இரண்டு முறை சூரிய கிரகணமும், 2 முறை சந்திர கிரகணமும் ஏற்படும். ஏற்கனவே ஏப்ரல் மாதத்தில் சூரிய கிரகணம் முதல் முறையாக ஏற்பட்டுவிட்டது. தற்பொழுது, இரண்டாவது முறை ஐப்பசி மாதம் சூரிய கிரகணம் தோன்ற இருக்கிறது.
இந்த சூரிய கிரகணத்தின் உச்சக்கட்ட நிலையை ரஷியாவில் 4:39 மணியளவில் காணலாம். இந்தியாவை பொறுத்தவரை இந்த சூரிய கிரகணம் மாலை 4:29 மணிக்கு தென்படும். சூரிய அஸ்தமன நேரமான 5:42 மணியளவில் இந்த கிரகணம் மறைந்துவிடும். இந்தியாவில் மாலை 5:30 மணியளவில் முழு சூரிய கிரகணத்தையும் கண்டுகளிக்க முடியும்.
சூரிய கிரகணத்தன்று என்ன செய்யலாம், செய்யக்கூடாது?
பொதுவாக கிரகண நேரத்தில் வெளியில் செல்லக்கூடாது மற்றும் எதுவும் சாப்பிடக்கூடாது என்று கூறப்படுவது உண்டு. எனவே சூரிய கிரகண நேரத்தில் யாராக இருந்தாலுமே வெளியில் செல்வதை தவிர்ப்பது நல்லது. கிரகண நேரத்தில் குறிப்பாக குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் வெளியில் செல்லக்கூடாது.
கிரகணம் முடிந்த பிறகு வீட்டை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். அதன் பிறகு வீட்டில் இருக்கும் அனைவருமே குளிக்க வேண்டும்
கிரகணம் தொடங்குவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பாக சாப்பிட்டுவிட வேண்டும். கிரகணத்துக்கு முன்பாக சமைத்த உணவுகளை கிரகணத்திற்கு பிறகு சாப்பிட வேண்டாம். எனவே, தேவையான அளவு மட்டும் சமைக்கவும். கிரகணத்திற்கு பிறகு அனைவரும் குளித்து அதன் பிறகு புதிதாக சமைத்து சாப்பிடுங்கள்.
உணவு மற்றும் தண்ணீரில் கிரகணத்திற்கு முன்பே துளசி இலைகள் மற்றும் தர்ப்பையை போட்டு வைப்பது நல்லது.
கிரகணத்தை பார்ப்பதற்கு பலருக்கும் ஆர்வமாக இருக்கும் ஆனால் நாம் சூரியனை சாதாரணமாக பார்ப்பது போல கிரகணத்தை பார்க்க கூடாது. அவ்வாறு பார்க்கும் பொழுது பார்வை கோளாறு ஏற்படக் கூடிய அபாயம் இருக்கிறது. கிரகணத்தை பார்ப்பதற்கு அறிவியல் அரங்குகளில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். உங்களால் வாய்ப்பிருந்தால் கிரகண நேரத்தில் கருவிகள் வழியாக பார்க்கலாம். எந்த காரணம் கொண்டும் நேரடியாக கிரகண நேரத்தில் சூரியனை பார்ப்பதற்கு முயற்சிக்க வேண்டாம்.