சிப்காட் பகுதியில் பைக் மெக்கானிக்கை இரும்பு ராடால் தாக்கிய சம்பவத்தில் 2 வாலிபர்களை போலீசார் நேற்று கைது செய்தனர்.
ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் பகுதியை சேர்ந்தவர் ஹரிஷ்குமார் (23). உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த இவர் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு சிப்காட் வந்து, பைக் மெக்கானிக் கடையை வைத்து நடத்தி வருகிறார்.
கடந்த 16ம் தேதி இரவு 9 மணியளவில், பைக் பழுதாகிநிற்பதாக கூறி ஹரிஷ்குமாரை போன் செய்து அழைத்த 2 மர்ம நபர்கள், சிப்காட் தனி யார் பெட்ரோல் பங்க் எதிரே வரவழைத்தனர். அப்போது பைக்கை நாளை சரிசெய்து தருவதாக ஹரிஷ்குமார் தெரிவித்ததில் வாக்குவாதம் ஏற்பட்டு, அவரை இரும்புராடால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர்.
இதில், படுகாயம் அடைந்த மெக்கானிக் ஹரிஷ்குமாரை அப்பகுதி மக்கள் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், வேலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்தனர்.
இந்நிலையில், நேற்று மாலை சிப்காட் அடுத்த மல்லாதி ஜங்ஷனில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, சப்-இன்ஸ் பெக்டர் ஜான்சேவியர் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக பைக்கில் வந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததால் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் ஓசூர் பெரிய தெருவை சேர்ந்த சீனிவாசன்(19), முருகன்(23) என்பதும, பைக் மெக்கானிக் ஹரிஷ்குமாரை இரும்பு ராடல் தாக்கியவர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார், 2 பேரையும் கைது செய்து, பைக்கை பறிமுதல் செய்தனர். பின்னர், அவர்களை ராணிப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.