Trains were delayed for an hour as a high tension electric cable fell near Mukundarayapuram railway station

முகுந்தராயபுரம் ரயில் நிலையம் அருகே உயர் அழுத்த மின்சார கேபிள் அறுந்து விழுந்ததால், ரயில்கள் ஒருமணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டது. தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம் சந்திப்பு ரயில் நிலையம், வாலாஜா, காட்பாடி சந்திப்பு ரயில் நிலையம் வழியாக, கர்நாடகா மாநிலம் பெங்களூரு உட்பட பல்வேறு நகரங்களுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

மேலும், சரக்கு ரயில் போக்குவரத்தும் தினந்தோறும் இயக்கப்பட்டு வருகிறது. இதன் மூலமாக பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். 

இந்நிலையில், வாலாஜா ரயில் நிலையம் அடுத்த முகுந்தராயபுரம் ரயில் நிலையத்தின் அருகே நேற்று மாலை ஓஎச் எனப்படும் உயர் அழுத்த மின்சார கேபிள் திடீரென அறுந்து விழுந்தது. இதனால் சென்னையில் இருந்து காட்பாடி வழியாக செல்லும் பெங்களூரு விரைவு ரயில், லால்பாக் விரைவு ரயில், திருவனந்தபுரம் விரைவு ரயில்கள் ஆகியன முகுந்தராயபுரம், வாலாஜா ஆகிய ரயில் நிலையங்களின் இடையில் நிறுத்தப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த காட்பாடி ரயில்வே பணியாளர்கள் முகுந்தராயபுரத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு அறுந்து கிடந்த உயர் அழுத்த மின்சார கேபிளை சரி செய்தனர். தொடர்ந்து, ரயில் போக்குவரத்து சீரானது. பின்னர், நடுவழியில் நிறுத்தப்பட்ட பெங்களூரு விரைவு ரயில், லால்பாக் விரைவு ரயில், திருவனந்தபுரம் விரைவு ரயில்கள் ஆகியவை ஒன்றன்பின் ஒன்றாக இயக்கப்பட்டது. ரயில்கள் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.