New Electricity Board Office: Inaugurated by Minister Gandhi
தாழனூர் துணை மின் நிலையத்தில் திறன் உயர்த்தப்பட்ட மின்மாற்றியை இயக்கித் தொடக்கி வைத்த அமைச்சர் ஆர்.காந்தி.
ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் நகரில் புதிய மின் வாரிய அலுவலகத்தை கைத்தறி, துணி நூல் துறை அமைச்சர் ஆர். காந்தி வியாழக்கிழமை திறந்து வைத்தார்.
மேல்விஷாரம் மின்வாரிய இள நிலைப் பொறியாளர் அலுவலகம் புறவழிச்சாலையில் உள்ள ஈஸ்வரன் கோயில் அருகே செயல் பட்டு வந்தது. அந்த அலுவலகம் மேல்விஷாரம் அண்ணா சாலை சவுக்கார் அப்துல் காதர் தெருவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.
இடமாற்றம் செய்யப்பட்ட மின்வாரிய அலுவலகத் திறப்பு விழாவுக்கு நகர்மன்றத் தலைவர் எஸ்.டி.முஹமது அமீன்தலைமை வகித்தார். தொழிலதிபர் சவுக்கார் முன்னா, நகர்மன்றத் துணைத்தலைவர் குல்சார் அஹமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அமைச்சர் ஆர்.காந்தி பங்கேற்று இடமாற்றம் செய்யப்பட்ட புதிய இளநிலைப் பொறியாளர் அலுவலகத்தைத் திறந்து வைத்தார்.
இதேபோல், ஆற்காடு ஒன்றியம், தாழனூர் கிராமத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் ரூ.2.84 கோடியில் 10 மெகாவாட்டிலிருந்து 16 மெகாவாட்திறன் உயர்த்தப்பட்ட மின் மாற்றியை அமைச்சர் ஆர்.காந்தி இயக்கித் தொடக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், மின் வாரியக் கண்காணிப்பு பொறியாளர் ராமலிங்கம், ஆற்காடு ஒன்றியக் குழு தலைவர் புவனேஸ்வரி சத்தியநாதன், துணைத் தலைவர் ஸ்ரீமதி நந்தகுமார், மின்வாரிய செயற்பொறியாளர் விஜயகுமார், உதவி இயக்குநர் சாந்திபூஷன், இளநிலைப் பொறியாளர் ஆனந்தன், ஆற்காடு மேற்கு ஒன்றிய திமுக செயலர் ஏ.வி.நந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.