உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் வெவ்வேறு நாட்களில் பொறியாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தியாவில், Sir பட்டம் பெற்ற பாரத ரத்னா விருது வென்ற இந்தியாவின் தலைசிறந்த பொறியாளரான, Sir MV என்று பரவலாக அறியப்பட்ட ’மோக்ஷகுண்டம் விஸ்வேஸ்வராயா’ அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 15 ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் பொறியாளர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
’மோக்ஷகுண்டம் விஸ்வேஸ்வராயா’ 1860 ஆம் ஆண்டு மைசூரில் ஒரு சிறிய கிராமத்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்த இவர், தன் 12 ஆம் வயதிலேயே தந்தையை இழந்தார்.
தனது பள்ளி படிப்பைச் சிக்கபல்லாபுராவிலும், இளங்கலைப் பட்டத்தைச் செண்டரல் காலேஜ், பெங்களூரிலும் முடித்தார்.
பின் கட்டிடப் பொறியியல் (civil engineering) படிப்பை புகழ்பெற்ற பூனே பொறியியல் கல்லூரியில் பயின்றார்.
ஆரம்பத்தில் மும்பை பொதுப்பணித்துறையில் வேலை பார்த்த இவர் பின்னாளில் இந்திய நீர்ப்பாசன கமிஷனில் பணியை தொடர அழைக்கப்பட்டார்.
இந்திய நீர்ப்பாசனத் துறையில் வேலை பார்த்த காலத்தில் மிகவும் சிக்கலான நீர்ப்பாசன அமைப்பைத் தக்காணப் பீடபூமி பகுதியில் செயல்படுத்தினார்.
இவரின் புகழுக்கு உச்சமாக கருதப்படுவது தெலுங்கானா ஹைதராபாத் நகரில் வெள்ளப் பாதுகாப்பு அமைப்பு தலைமை வடிவமைப்பாளராக இருந்தது மற்றும் மைசூர் கிருஷ்ண ராஜா சாகர அணை கட்டுமான பொறுப்பு தலைமைப் பொறியாளராக இருந்தது.
இந்த அணை கட்டப்பட்டது போது இதுதான் ஆசியாவிலேயே மிகப்பெரிய நீர்த்தேக்கமாகக் கருதப்பட்டது. அவருடைய பங்களிப்பு வெறும் பொறியியல் உள்கட்டமைப்பு திட்டங்களில் (அணைகள் மற்றும் பாலங்கள் போன்ற) மட்டுமில்லாமல் இரும்பு, எஃகு, சோப்புகள், பட்டு, சர்க்கரை, வங்கி மற்றும் வானியல் உட்பட பல துறைகளும் சிறந்து விளங்கக் கருவியாகத் திகழ்ந்தார்.
ஒரு குறுகிய காலம் அவர், ஹைதராபாத் நிஜாமாக இருந்த இவர் 7 ஆண்டுகள் மைசூரின் திவானாகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொது நலனில் விஸ்வேஸ்வரய்யா அவரின் எண்ணற்ற பங்களிப்புகளுக்காக பிரிட்டிஷ் அரசின் மூலம் இந்தியப் பேரரசின் நைட் கமாண்டர் (KCIE) என்ற ‘சர்’ பட்டம் வென்றார்.
வடிவமைப்பு மற்றும் நிறைவேற்றத்துக்கான அறிவு மட்டும் இவரின் சிறப்பம்சம் அல்ல தொழில் நெறி, அர்ப்பணிப்பு, தனித்துவம், பேரார்வம் போன்ற பண்புகளுக்கு மறுவடிவம் கொடுத்தவர். Sir. Dr. ’மோக்ஷகுண்டம் விஸ்வேஸ்வராயா’.
இவரின் பிறந்த நாளான இன்று அவரது நினைவாக, இந்திய நாடு முழுவதும் பொறியாளர்களை ஊக்குவிக்கும் விதமாக “பொறியாளர்கள் தினம்” கொண்டாடுகிறது.
இன்றைய பாரதத்தை உருவாக்கிய அனைத்துப் பொறியாளர்களுக்கும் நாளைய பாரதத்தை உருவாக்கும் அனைத்துப் பொறியாளர்களுக்கும் இனிய பொறியாளர்கள் தின நல்வாழ்த்துகள்!.