A woman hanged herself after writing a threatening letter on the sewage tank issue in Walaja
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா இந்திரா நகரை சேர்ந்தவர் வினோத்குமார். இவரது மனைவி சசிகலா(38). இவர்களுக்கு 8 வயதில் மகன், 3 வயதில் மகள் உள்ளனர். வினோத்குமார் உடல்நலக்குறைவு காரணமாக 3 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் சசிகலா மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சசிகலா தனது வீட்டில் உள்ள அறையில் துப்பட்டாவில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல்றிந்த வாலாஜா போலீசார் வந்து, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், சசிகலா வீட்டில் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அவர் கைப்பட எழுதியதாக உருக்கமான கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.
அதில், தனது வீட்டின் அருகே உள்ள பெண்ணுக்கும் தனது வீட்டிற்கும் இடையே உள்ள கழிவுநீர் தொட்டி தொடர்பாக மூன்று ஆண்டுகளாக பிரச்னை இருந்து வருகிறது.
இந்த நிலையில் கழிவுநீர் தொட்டி தொடர்பாக அந்த பெண் வழக்கு தொடர்ந்து உள்ளதாகவும், வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்றால் தான் சொல்லும் ஆண்களுடன் பழக்கம் வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் மிரட்டியுள்ளார்.
மேலும் பெண், 2 ஆண்கள் இணைந்து தொடர்ச்சியாக தன்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கி வந்துள்ளனர்.
இதுகுறித்து யாரிடமாவது தெரிவித்தால் தன்னையும் தனது குழந்தைகள் மற்றும் மாமனார், மாமியார் ஆகியோரை கொலை செய்து விடுவேன் என மூவரும் தொடர்ச்சியாக மிரட்டி வந்துள்ளனர். எனவே எனது சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எனது குழந்தைகளையும் மாமனார் மற்றும் மாமியார் ஆகியோரை காப்பாற்றுங்கள். இவ்வாறு அந்த கடிதத்தில் எழுதியுள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, பெண் உட்பட மூன்று பேரையும் வாலாஜா போலீசார் நேற்று பிடித்து தீவிர விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.