அரக்கோணத்தில் வர்ணம் பூசும் தொழிலாளி கழுத்தறுத்து ஞாயிற்றுக்கிழமை கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
அரக்கோணம் தோல் ஷாப் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (26), வர்ணம் பூசும் தொழிலாளி. ஞாயிற்றுக்கிழமை இவர் மது போதையில் மூகாம்பிகை நகரில் உள்ள முடிதிருத்தும் கடை அருகில் வருவோர் போவோரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது வந்த கீழ்குப்பம் இந்திராநகரைச் சேர்ந்த மைக்கேல் (26) என்பவரிடம் மாரிமுத்து வாக்குவாதம் செய்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த மைக்கேல் முடிதிருத்தும் கடையில் இருந்த கத்தியை எடுத்து மாரிமுத்துவின் கழுத்தை அறுத்தாராம். இதில் பலத்த காய மடைந்த மாரிமுத்து, அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியில் இறந்தார்.
இந்தக் கொலை சம்பவம் குறித்து அரக்கோணம் நகர போலீஸார் விசாரணை நடத்தி மைக்கேலை கைது செய்தனர். சம்பவ இடத்தை மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் ராஜாசுந்தர் நேரில் பார்வையிட்டு விசாரணை செய்தார்.