ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் துறை சார்ந்த அலுவலர்களுக்கான கூட்டம் நடந்தது. கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமை வகித்தார். அப்போது அவர் பேசியதாவது:
சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடியினை மூன்று நாள் பறக்க விட வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை ஊரக வளர்ச் சித்துறை, நகராட்சி நிர்வாகம், டவுன் பஞ். துறையினர் செய்ய வேண்டும்.
ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் 288 பஞ்.களில் உள்ள 2 லட்சத்து 4 ஆயிரம் குடியிருப்புகளில் தேசிய கொடியை பறக்க விட, தேசியக்கொடியை வாங்கி ஒவ்வொரு வீடுகளுக்கும் கொடுக்க மகளிர் திட்டத்தின் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேசிய கொடியை அனைத்து விடுகளுக்கும் வழங்கி 13, 14 மற்றும் 15 ஆகிய மூன்று தினங்களில் பறக்கவிட வேண்டும்.
தேசிய கொடிக்கு பணம் பெற்று வழங்க வேண்டும். இலவசமாக வழங்கக்கூடாது. இதனை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஒவ்வொரு கிராமத் திலும் பஞ். தலைவர், பஞ். செயலாளர் மூலமாக முறையாக கொண்டு சேர்த்து அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி பறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேபோன்று நகராட்சி நிர்வாகம் சார்பில் ஒரு லட்சத்து 35 ஆயிரம் வீடுகளிலும், டவுன் பஞ்சாயத்துகளில் 23 ஆயிரம் குடியிருப்புகளிலும் தேசிய கொடி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடி பறக்க விடும் போது அதை புகைப்படம் எடுத்து வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
தேசியக்கொடிக்கு அவமரியாதை செய்யும் வகையில் ஏற்றுவதோ மற்ற செயல்களில் ஈடுபடுவதோ இருக்கக்கூடாது. இதையும் கண்காணிக்க வேண்டும். அனைத்து துறை அலுவலர்களும் இப்பணியை முறையாக செய்ய வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.