ராணிப்பேட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முகாமில் 142 மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் வழங்கினார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு, ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை தோறும் அடையாள அட்டை வழங்கும் சிறப்பு மருத்துவ முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.
அதன்படி இந்த வார முகாமில் மாவட்டம் முழுவதிலும் இருந்து பல்வேறு குறைபாடுகளுடைய மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர். இதில் 142 பேருக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டையும், 52 பேருக்கு முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் பதிவும், 77 புதிய பயனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைக்கான பதிவும் மற்றும் 108 பேருக்கு மாற்றுத் திறனாளி நல வாரியத்தில் பதிவும் மேற் கொள்ளப்பட்டது.
இந்த முகாமில் செயற்கைகால் வழங்கக் கோரி 6 பேரும், அறிவுசார் குறைபாடுடையவர்களுக்கான பராமரிப்பு நிதி உதவித் தொகை வேண்டி 13 பேரும், வங்கி கடனுதவி வேண்டி 9 பேரும், பெட்ரோல் ஸ்கூட்டர் கேட்டு 17 பேரும், சக்கர நாற்காலி கோரி 11 பேரும் விண்ணப்பம் அளித்தனர். தொடர்ந்து இந்த முகாமில் பங் கேற்ற மாற்றுத்திறனாளிகளும் மற்றும் அவர்களுடன் வருகை தந்தபாது காவலார்கள் என சுமார் 300 பேருக்கும் ராணிப்பேட்டை அனைத்து மாவட்ட மாற்றுத் திறனாளி நலச்சங்கத்தின் சார்பில், ச.பழனியம்மாள் - சதீஷ்குமார் ஏற்பாட்டில் மதிய உணவு வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுடன் அமர்ந்து ஆட்சியரும் உணவு அருந்தினார்.
முகாமில் மாற்றுத் திறனாளி நல அலுவலர் சரவணக்குமார் மற்றும் மாற்றுத்திறனாளி அலுவல கப்பணியாளர்கள் மற்றும் மருத் துவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.