ஓட்டல் தொழிலில் நஷ்டம் ஏற்பட் டதால் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட வடநாட்டு வாலிபரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

ஆற்காடு அடுத்த மாங்காடு பஸ் நிறுத்தத்திலிருந்து தோல் தொழிற்சாலை வேலைக்கு நடந்து சென்ற மாலதி என்பவரிடமிருந்து கடந்த மாதம் 3 சவரன் தங்க சங்கிலியை பைக்கில் வந்த மர்ம ஆசாமி பறித்துச் சென்றுள்ளார். அதே போல் சாத்தூர் பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்த ஞானசவுந்தரி என்பவரிடமிருந்து நான்கு சவரன் தங்கச் சங்கிலியையும், கடப்பந்தாங்கல் கோயில் அருகே நடந்து சென்ற சாவித்திரி என்பவரிடமிருந்து 5 சவரன் தங்கச்சங்கிலியையும் பைக்கில் வந்த மர்ம ஆசாமி பறித்துச் சென்றுள்ளார். மேலும் ஆற்காடு தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அடிக்கடி சங்கிலிப் பறிப்பு சம்பவம் நடைபெற்று வந்துள்ளது.

இதனையடுத்து ராணிப்பேட்டை எஸ்பி தீபா சத்யன் உத்தரவின் பேரில் டிஎஸ்பி பிரபு மேற்பார் வையில், தாலுகா இன்ஸ் பெக்டர் காண்டீபன் தலைமையில் தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டு தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். மேலும் 50க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் ஆற்காடு அடுத்த புதுப்பாடி கூட் ரோடு பகுதியில் இன்ஸ்பெக்டர் காண்டீபன் தலைமையில் தனிப்படையினர் நேற்று வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பைக்கில் வந்த ஒரு வாலிபரிடம் விசாரணை செய்தனர். அப்போது முன்னுக்கு முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த போலீசார் அந்த வாலிபரை தாலுகா காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை செய்தனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. விசாரணையில் அசாம் மாநிலம் ஜாகிரோத் பகுதி மவுரிகயுன் கிராமத்தைச் சேர்ந்த அசின்அலி (21) என்பதும், இவர் மாலதி, ஞானசவுந்தரி, சாவித்திரி ஆகியோரிடம் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை செய்தனர். விசாரணையில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அசின் அலி திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் ஒரு ஓட்டலில் வேலை செய்து வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து அந்த ஓட்டலை லீசுக்கு எடுத்து நடத்தி வந்துள்ளார். 

ஓட்டல் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மீண்டும் அதே ஓட்டலில் தொழிலாளியாக வேலைக்கு சேர்ந்துள்ளார். தினமும் காலை 6 மணிக்கு ஓட்டலுக்கு தேவையான காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்காக பைக்கில் வருவாராம். அப்படி வரும் போது காலை நேரங்களில் வேலைக்கு நடந்து செல்லும் பெண்களை நோட்டமிட்டு அவர்கள் அணிந்துள்ள சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிவிடுவது வழக்கமாக இருந்துள்ளது. இப்படிப்பட்ட வழிப்பறியை காலை 6 மணி முதல் 9 மணிக்குள் முடித்துக் கொண்டு வழக்கமாக ஓட்டல் வேலைக்கு சென்று விடுவாராம் என்று போலீஸ் தரப்பில் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்து அசின் அலியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 12 சவரன் தங்க நகைகளையும் பைக்கையும் பறிமுதல் செய்தனர். மேலும் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் ஆற்காடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.