ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிலையத்தில் கத்திமுனையில் தொழிலாளியிடம் வழிப்பறி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ராணிப்பேட்டை பைபாஸ் சாலை ஜெயராம் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கோபி(43), தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் முத்துக்கடை பஸ் நிலையம் அருகே நின்றிருந்தார்.
அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி கோபி வைத்திருந்த 34,300 ரொக்கம், ஆதார்கார்டு, செல்போன் ஆகியவற்றை பறித்தாராம்.
இதனை தடுக்க முயன்ற கோபியை அவர் கீழே தள்ளி தாக்கியதாகவும் கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த பொதுமக்கள் அந்த வாலிபரை பிடிக்க முயன்றனர். ஆனால் அந்த வாலிபர் அங்கிருந்த மது பாட்டிலை உடைத்து பொதுமக்களை குத்துவது போன்று மிரட்டிவிட்டு தப்பிச்சென்றுவிட்டார்.
இதுகுறித்து கோபி நேற்று முன்தினம் மாலை ராணிப்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாமலை மற்றும் போலீசார் அந்த வாலிபரை தேடிவந்தனர்.
விசாரணையில் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் ராணிப்பேட்டை வேம்புலி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த பானர்ஜி என்கிற கார்த்தி(25) என தெரியவந்தது.
இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த பணம், ஆதார் கார்டு மற்றும் செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் ராணிப்பேட்டை மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.