ராணிப்பேட்டை நகரில் செயல்படும் உழவர் சந்தையை மாலை நேரத்திலும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, விவசாயிகள் அதற்கான அனுமதி அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ராணிப்பேட்டை மாவட்டத்தில், ராணிப்பேட்டை மற்றும் ஆற்காடு உழவர் சந்தைகள் சிறப்பாக இயங்கி வருகின்றன. நாளொன்றுக்கு சராசரியாக ரூ. 12 லட்சம் மதிப்புள்ள 30 மெட்ரிக்டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
2022-23-ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதி நிலை அறிக்கையில் உழவர் சந்தைகளில் பிற்பகலிலும் வேளாண் பொருள்கள் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு, அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தற்போது உழவர் சந்தைகள் காலை 6 மணி முதல் நண்பகல் வரை இயங்கி வருகின்றன. இந்த நிலையில், அரசு ஆணைப்படி, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு உழவர் சந்தை வீதம், ராணிப்பேட்டை மாவட்டத்தில் ராணிப்பேட்டை உழவர் சந்தையை மட்டும் மாலை நேரத்தில் இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும். மாலை நேர உழவர் சந்தையில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் ராணிப்பேட்டை, வேளாண்மை துணை இயக் குநரை (வேளாண் வணிகம்) அணுகி தனி அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.