வேலுார் சத்துவாச்சாரி பொன்னி யம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் மனோஜ்(21). இவர் வீட்டின் போர்டிகோ பகுதியில், நேற்று முன்தினம் சமையல் காஸ் சிலிண்டர் வைக்கப் பட்டிருந்தது.
அப்போது, அந்த தெரு வழியாக பகல் 1 மணிக்கு பைக்கில் சென்ற 2 பேர், வீட்டின் போர்டிகோ பகுதியில் சிலிண்டர் இருப்பதை கண்டு திருடுவதற்கு திட்டமிட்டனர். தொடர்ந்து, ஒரு நபர் வீட்டுக்குள் சென்று சிலிண்டரை துக்கி வந்ததும், 2 பேரும் பைக்கில் புறப்பட்டனர். இதை வீட்டில் இருந்து வெளியே வந்தவர்கள் பார்த்து,
திருடன், திருடன் என கூச்சலிட்டதும், அப்பகுதி மக்கள் பைக்கில் சிலிண்டருடன் சென்றவர்களை மடக்கிப் பிடித்தனர். அதோடு, 2 பேருக்கும் தர்ம அடி கொடுத்து, சத்துவாச்சாரி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரணை செய்ததில், சங்கரன்பாளையத்தைச் சேர்ந்த சதீஷ் குமார்(46), கஸ்பா வசந்தபுரத்தைச் சேர்ந்த கார்த்திக்(23) ஆகியோர் சிலிண்டர் திருடியது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.